கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைக்கு உட்படாமல் செயல்பட்ட ஐந்து நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் நாணய ஆணையம் மொத்தம் $960,000 அபராதம் விதித்துள்ளது.
இந்த ஐந்து நிறுவனங்களும் மற்ற நாடுகளுக்குப் பணம் மாற்றும் சேவையை வழங்க உரிமம் பெற்றவை.
ரெம்சீ, ஆர்கேட் பிளாசா டிரேடர்ஸ், ஜே-டீ ரெமிட்டன்ஸ் சர்விசஸ், மொபைல் கம்யூனிட்டி டெக், ஒக்ஸ்பே எஸ்ஜி ஆகிய ஐந்து நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
வெளிச்சத்துக்கு வந்த குறைபாடுகளில் பணம் மாற்றும் சேவைக்காக நாடி வரும் வாடிக்கையாளர்கள் தொடர்பான விவரங்களைச் சரிபார்க்காததும் அடங்கும்.
பணம் அனுப்புவோர், பணம் பெறுவோர் தொடர்பான விவரங்களை நிறுவனங்களால் வழங்க முடியவில்லை என்று ஆணையம் கூறியது.
எனவே, பணப் பரிவர்த்தனையின் வெளிப்படைத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டது என அது தெரிவித்தது.
குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று ஐந்து நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன என்றும் அவை கண்காணிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது.

