போதைப் புழக்கத்திற்காக சென்ற ஆண்டு சிறைக்குச் சென்ற நிசார் (உண்மை பெயரல்ல), 34, விடுதலையாகி குடும்ப உறுப்பினர்களுடன் நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கிறார்.
தாயாரும் மாமியாரும் சமைக்கும் சம்பால் சோத்தோங், சம்பால் கோரேங் ஆகிய விருப்பமான உணவு வகைகளை சாப்பிடக் காத்துக்கொண்டிருக்கிறார்.
நோன்புப் பெருநாளுக்கு வீட்டுக்கு வந்துவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாக மனைவியுடன் சேர்ந்து நோன்பு கடைப்பிடிக்க முடியாமல் போனதில் நிசாருக்கு வருத்தம்தான்.
எனினும், சிறையில் கைதிகளுடன் நோன்பு துறப்பது நிசாருக்குப் புதிய அனுபவமாக இருக்கிறது.
நிசார் போன்று சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகள் நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தின் ஒவ்வொரு நாளும் செலராங் பார்க் வளாகத்தின், எஸ்1 கழகத்தில் (Institution S1, Selarang Park Complex) சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது.
கிட்டத்தட்ட 3,200 கைதிகளுக்கு எஸ்1 கழகத்தில் அன்றாடம் உணவு தயாராகிறது. அவர்களில் 1,700 பேர் முஸ்லிம்கள்.
முஸ்லிம்களுடன் மற்ற மதத்தினருக்கும் நோன்பு மாதத்தில் எஸ்1 கழகத்தில் உணவு சமைக்கப்படுகிறது. கைதிகளுக்கான மூன்று வேளை உணவையும் கைதிகளே தயாரிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
காலை எட்டு மணியிலிருந்து பிற்பகல் 4.30 மணி வரை ஒவ்வொருநாளும் உணவு வகை சமைக்கப்படுகிறது.
சமையலறையில் வேலை பார்க்கும் கைதிகள் விருப்பத்தின் அடிப்படையில் உதவி வருகின்றனர்.
காய்கறி வெட்டுவது, அசைவ உணவைத் தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, உணவு பரிமாறுவது என கைதிகள் தோழமையுடன் பணி செய்கின்றனர்.
சிங்கப்பூர் சிறைச் சேவை ஏற்பாட்டில் கைதிகள் நோன்புத் துறப்புக்கு தயாராவதை செவ்வாய்க்கிழமை (25 மார்ச்) தமிழ் முரசு கண்டது.
ஒரே நேரத்தில் சமையலறையில் கிட்டத்தட்ட 97 கைதிகள் வேலை செய்கின்றனர். சோறாக்கும் இடத்தில் ஏறத்தாழ மூன்று டன் அரிசியை வைப்பதற்கான பெரிய இயந்திரம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை நோன்பு துறப்புக்குச் சோற்றுடன் கோழிப் பிரட்டல், காய்கறிப் பிரட்டல் ஆகியவை பரிமாறப்பட்டன.
பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கிய சமையல் வேலை 3.45 மணியளவில் நிறைவுபெற்றது.
உள்துறை, தேசிய வளர்ச்சிக்கான துணையமைச்சர் முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் கைதிகளுடன் நோன்பு துறந்தார்.
கைதிகளுடன் உரையாடிய அமைச்சர் அவர்கள் மீண்டும் வழி தவறாமல் போவதற்கான ஆலோசனைகள் தந்து அவர்களுடன் நேரமும் செலவிட்டார்.
அடுத்த இரு வாரங்களில் சிறையில் இருந்து வெளிவர உள்ள ஆடம் (உண்மைப் பெயரன்று), 24, சிறையில் இம்முறை நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கிறார்.
இந்த நோன்புப் பெருநாள் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாக ஆடம் கூறினார்.
நோன்பு துறப்பதற்கான ஏற்பாடுகள் சிறையில் சிறப்பாக நடைபெறுவதாய் கூறிய அவர், சிறையில் வழங்கப்படும் சமய ஆலோசனைகளும் நல்ல பாதையில் செல்ல பேருதவியாக இருப்பதாகச் சொன்னார்.