‘பிரெட்டாக்’ சர்ச்சை; துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் பணிநீக்கம்

‘பிரெட்டாக்’ சர்ச்சை; துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் பணிநீக்கம்

2 mins read
e94aaae2-f286-4061-af49-9c8cf74b0fe9
உணவு வைக்கப்படும் காட்சிப் பெட்டியை துடைப்பத்தால் சுத்தம் செய்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார். - படம்: ஃபேஸ்புக்/COMPLAINT SINGAPORE

சீமெய் வட்டாரத்தில் உள்ள ஈஸ்ட்பாயிண்ட் கடைத்தொகுதியில் பிரெட்டாக் (BreadTalk) கடை ஒன்று உள்ளது. அந்தக் கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், உணவு வைக்கப்படும் காட்சிப் பெட்டியை துடைப்பத்தால் சுத்தம் செய்துள்ளார்.

ஊழியர் துடைப்பத்தைக்கொண்டு சுத்தம் செய்யும் காணொளி சமூக ஊடகத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது பலரால் பார்க்கப்பட்டது. இதையடுத்து தற்போது பிரெட்டாக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். இந்த வி‌ஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். மனதார மன்னிப்புக் கேட்கிறோம். ஊழியரின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று பிரெட்டாக் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தூய்மையில் பிரெட்டாக் நிறுவனம் எப்போதுமே கவனமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் பிரெட்டாக் நிறுவனத்தின் நேரடி ஊழியர் இல்லை. அவர் சுத்தம் செய்யும் வேலைகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.

“பிரெட்டாக் கடைகளில் உணவுப் பாதுகாப்புக்கு எனப் பயன்படுத்தப்படும் துணிகளால் மட்டுமே உணவு வைக்கப்படும் காட்சிப் பெட்டியைச் சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல் அனுமதி வழங்கப்பட்ட ரசாயனங்களை மட்டுமே ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“சம்பந்தப்பட்ட கடையில் தூய்மைப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காட்சிப் பெட்டியில் இருந்த அனைத்து உணவுப் பொருள்களும் அகற்றப்பட்டுள்ளன,” என்று பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஈஸ்ட்பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள பிரெட்டாக் கடை தற்போது வழக்கம் போல் செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்