தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளிக்கூட பராமரிப்பு நிர்வாகி மீது லஞ்சக் குற்றச்சாட்டு

2 mins read
0349d902-3c3d-4ad1-8652-b3f424fbb626
58 வயது இங் செர் ஹிம் $67,000க்கும் அதிகமான தொகையை லஞ்சமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லஞ்சம் வாங்கியதாக செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்தின் பள்ளிக்கூட பராமரிப்பு நிர்வாகி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

58 வயது இங் செர் ஹிம் $67,000க்கும் அதிகமான தொகையை லஞ்சமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.

செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்துடன் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த மூன்று பேர் அவருக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இங், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 31 முறை லஞ்சம் வாங்கியதாக நம்பப்படுகிறது.

லஞ்சம் வாங்கியதாக வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 18) இங் மீது ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகின.

போலி கணக்குகளைக் கொண்ட ஆவணங்களுடன் பள்ளியை ஏமாற்றியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் எஃப்பி சர்வீசஸ் கட்டுமான நிறுவனத்தின் விற்பனை மேலாளரான ரெனீ சோங் முய் குவானிடமிருந்து இங் மொத்தம் $24,820 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சோங்கிடமிருந்து இங் $34,780 லஞ்சம் பெற்றுக்கொண்டார்.

53 வயது சோங் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகின.

குளிர்சாதன நிறுவனம் ஒன்றின் இயக்குநரான வீ கிம் வெய்யிடமிருந்து இங் $5,000 லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இங்கிற்கு லஞ்சம் கொடுத்ததாக 48 வயது வீ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சேவை நிறுவனம் ஒன்றின் இயக்குநரான மார்கரெட் சின் லீ லான் என்பவரிடமிருந்து இங் குறைந்தது $2,500 லஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

செயிண்ட் ஜோசஃப்ஸ் கல்வி நிலையத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது குறித்து போலிக் கணக்கு கொண்ட ஆவணங்களைத் தயாரித்தது தொடர்பாகவும் இங், சின் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 30ஆம் தேதியன்று இங் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

சோங், வீ, சின் ஆகிய மூவரும் அக்டோபர் 16ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர்.

ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்