கையூட்டு: வியட்னாம் ஏர்லைன்ஸ் மேலாளர்கள் மூவர்மீது குற்றச்சாட்டு

கையூட்டு: வியட்னாம் ஏர்லைன்ஸ் மேலாளர்கள் மூவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
11b2dbac-1413-4a5a-bf2f-a87d2c5a01c6
(மேல் இடமிருந்து) அமீர் கான் ஷூல் ஹமீத், போ பூன் லியோங், டிரோங் தி நங், (கீழ் வலமிருந்து) லாம் அன் வியட், லே டிராக் துவான். - படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வியட்னாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மேலாளர்களாகப் பணியாற்றிய ஆடவர் மூவர், பயணப்பெட்டிகளுக்கான கூடுதல் கட்டணங்களை வசூலிக்காமல் இருப்பதற்காகக் கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சிங்கப்பூரரான அமீர் கான் ஷூல் ஹமீத், 42, தற்காலிக நிலைய மேலாளராக இருந்தபோது, சிங்கப்பூரரான போ பூன் லியோங், 51, வியட்னாம் நாட்டவரான டிரோங் தி நங், 49, ஆகியோரிடமிருந்து மொத்தம் $41,000 பெற்றதாகக் கூறப்படுகிறது.

அவர் துணை நிலைய மேலாளராக இருந்தபோது, நங்கிடமிருந்து மேலும் $700 பெற்றதாகக் கூறப்படுகிறது. அவர்மீது மொத்தம் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

வியட்னாம் நாட்டவரான லே டிராக் துவான், 48, நிலைய மேலாளராக இருந்தபோது நங்கிடமிருந்து $6,500 பெற்றதாகக் கூறப்படுகிறது.

கையூட்டு கொடுத்ததாக போ, நங் ஆகியோர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. போ மீது மூன்று குற்றச்சாட்டுகளும் நங் மீது ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் துவான், சிங்கப்பூரில் உள்ள அந்த விமான நிறுவனத்தின் பொது மேலாளரான லாம் அன் வியட், 52, என்பவருக்கு தன்னைப் பற்றி வியட்னாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குப் புகாரளிக்காமல் இருப்பதற்காக $3,000 கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

வியட்னாம் நாட்டவரான வியட் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அமீர் 2020 நவம்பருக்கும் 2022 ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

துவான் 2023ஆம் ஆண்டில் கையூட்டு பெற்றதாகக் கூறப்படுவதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்த ஐவருக்கும் எதிரான வழக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்