நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைக் குழு இயக்குநர் ஹென்ரி ஃபூ யங் தாய்க்கு ஆடவர் இருவர் லஞ்சம் கொடுத்ததாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், திரு பே தியாவ் ஹெங், திரு பெக் லியான் குவான் ஆகிய இருவர் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து அரசாங்க வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்கின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதாக அக்டோபர் 11ஆம் தேதியன்று மாவட்ட நீதிபதி சோ சீ பியான் கூறினார்.
அந்த அறிக்கை துல்லியமற்றது என்றும் நம்பகத்தன்மையற்றது என்றும் நீதிபதி தெரிவித்து இருவரையும் விடுவித்தார்.
இதை அடுத்து, தீர்ப்பை எதிர்த்து அக்டோபர் 14ஆம் தேதியன்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.
59 வயது திரு பெக், தியோங் செங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவராகப் பதவி வகித்தவர்.
56 வயது திரு பே, தியோங் செங் கன்டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார்.


