பிரிட்ஜ் டேட்டா சென்டர்ஸ் நிறுவனம், ஆசியா முழுவதும் தனது வளர்ச்சியை விரிவுபடுத்தும் நோக்கில், சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக $5 பில்லியன் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேம்பட்ட மின் கட்டமைப்பு, அடுத்த தலைமுறை குளிரூட்டி கட்டமைப்புகள், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் செயல்பாடுகள் மற்றும் தீவிர கணினி சூழல்களுக்கான ஆற்றல் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் வசதிகளுக்காக இந்த நிறுவனம் முதலீடு செய்யும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஃபான் தெரிவித்துள்ளார்.
பெயின் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற இந்த நிறுவனம், 2030ஆம் ஆண்டிற்குள் உலகளவில் மூன்று ஜிகாவாட் ஆற்றல் கொண்ட உள்கட்டமைப்பை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காகப் பல நிறுவனங்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தியா முதல் தென்கிழக்கு ஆசியா வரையிலான சந்தைகளில் தங்களை விரிவுபடுத்தி வரும் பல தரவு மைய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
“இந்த முயற்சியின் முதன்மை மையமாகச் சிங்கப்பூர் இருக்கும்,” என்று திரு. ஃபான் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு தொடர்பான வசதிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிக்க தொழில்நுட்ப மற்றும் ஆய்வு-மேம்பாட்டுத்துறை நிபுணர்களையும் நாங்கள் பணியமர்த்துவோம்.” என்றார் அவர்.
தொழில்நுட்ப நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் மேம்பட்ட சில்லுகள் மற்றும் குளிரூட்டி கட்டமைப்புகள் கொண்ட வசதிகளுக்காகப் பல பில்லியன் வெள்ளியைக் கொட்டுவதால், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான உலகளாவிய போட்டி தரவு மையங்களில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைத் தூண்டியுள்ளது.
இருப்பினும், இத்தகைய பெரும் செலவுகளை நியாயப்படுத்தும் அளவிற்கு இந்த முதலீடுகள் உண்மையான பொருளியல் லாபத்தைத் தருமா என்ற கவலையையும் இந்த வேகமான கட்டுமானப் பணிகள் ஏற்படுத்தியுள்ளன.
பிரிட்ஜ் டேட்டா சென்டர்ஸ் நிறுவனத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்று, சிங்கப்பூரின் முதல் மிதக்கும் ஹைட்ரோஜன் மின் உற்பத்தி திட்டமாகும். இதனை கான்கார்ட் நியூ எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்து பிரிட்ஜ் டேட்டா சென்டர்ஸ் உருவாக்கி வருகிறது. இந்த மிதவை அடிப்படையிலான அமைப்பு, எதிர்கால செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

