சிங்கப்பூர் பூல்ஸ் கணினிக் கட்டமைப்பில் புதன்கிழமை (டிசம்பர் 4) ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதன் சேவையில் இடையூறு ஏற்பட்டது.
நண்பகல் 12 மணிவாக்கில் அந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் பின்னர் 1.10 மணியிலிருந்து சேவைகள் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பியதாகவும் சிங்கப்பூர் பூல்ஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிங்கப்பூர் பூல்ஸ் விற்பனை முகப்புகள் மூடப்பட்டதாக அறிவிப்புகள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகச் சீன நாளிதழ் லியான்ஹ சாவ்பாவ் கூறியது. சில கிளைகள் கதவை அடைத்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.
‘பேநவ்’ வழியாகப் பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்று சிங்கப்பூர் பூல்ஸ் இணையத்தளத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் விளையாட்டு, பரிசுச்சீட்டு, குதிரைப் பந்தயம் தொடர்பான பந்தயங்களைச் சட்டபூர்வமாக நடத்தும் ஒரே நிறுவனம் சிங்கப்பூர் பூல்ஸ்தான்.
சென்ற ஆண்டு மட்டும் அத்தகைய பந்தயங்களுக்கு $12.2 பில்லியன் செலவிடப்பட்டது என்று அந்நிறுவனம் கடந்த நவம்பரில் வெளியிட்ட ஆண்டறிக்கை குறிப்பிட்டது.

