பிரிட்டன் செல்லும் சிங்கப்பூரர்கள் இனி ‘இடிஏ’ (Electronic Travel Authorisation) என்னும் இணையவழி பயண அனுமதியைச் சமர்ப்பிக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதிக்கு பிறகு பிரிட்டன் செல்பவர்கள் ‘இடிஏ’ சமர்பிக்க வேண்டும்.
‘இடிஏ’ விண்ணப்பத்திற்கான செலவு 17 வெள்ளி என்று தெரிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இணையத்தளம் அல்லது செயலி மூலம் சிங்கப்பூரர்கள் நவம்பர் 27ஆம் தேதிமுதல் ‘இடிஏ’க்கு விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரர்களின் கடப்பிதழுடன் மின்னியல் முறையில் ‘இடிஏ’ இணைக்கப்பட்டிருக்கும். அதனை இரண்டு ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். ‘இடிஏ’ மூலம் பலமுறை நாட்டிற்குள் வந்து செல்ல அனுமதி உண்டு. ஒவ்வொரு முறையும் பிரிட்டனுக்குள் செல்லும்போது ஆறு மாதக் காலம் வரை தங்கவும் அது அனுமதி வழங்கும்.
பொதுவாக ‘இடிஏ’ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த மூன்று நாள்களுக்குள் முடிவுகள் வழங்கப்படும் என்று பிரிட்டிஷ் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ‘இடிஏ’ குறித்த முடிவுகள் தெரிவிக்கப்படும்.
வான்வழி, தரைவழி, கடல்வழி என எந்த வழி மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்தாலும், ‘இடிஏ’ அனுமதி இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரிட்டன் விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்பவர்களும் (டிரான்சிட் பயணிகள்), ‘இடிஏ’ அனுமதியை வைத்திருக்க வேண்டும்.
பிரிட்டனின் ‘இடிஏ’ அனுமதியைக் கொண்டு அயர்லாந்து அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல அனுமதி இல்லை.
தொடர்புடைய செய்திகள்
பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ‘இடிஏ’ அனுமதி நடப்புக்கு வந்துள்ளது. சிங்கப்பூர் உட்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ‘இடிஏ’ பொருந்தும் என்று பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
‘இடிஏ’ அனுமதியால் சட்டவிரோதமாக நாட்டிற்குள் குடியேறுவது, கும்பல் நடவடிக்கைகளைத் தடுப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்றவை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் விசா இல்லாமல் பிரிட்டனுக்குள் நுழையும் பயணிகள் அனைவரும் ‘இடிஏ’ அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

