வயர்கார்டு முறைகேடு வழக்கில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் ஆடவர்: தப்பியோடும் அபாயம் இருப்பதால் பிணை ரத்து

வயர்கார்டு முறைகேடு வழக்கில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் ஆடவர்: தப்பியோடும் அபாயம் இருப்பதால் பிணை ரத்து

2 mins read
8d8f5b25-cba6-4e7b-ae64-a17f071a2b96
ஜேம்ஸ் ஹென்றி ஓ’சலிவன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெர்மனியின் வயர்கார்டு நிதி நிறுவனத்தின் வீழ்ச்சியுடன் தொடர்புடைய குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட 51 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஜேம்ஸ் ஹென்றி ஓ’சலிவன், தமது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்த நிலையில், புதன்கிழமையன்று (மார்ச் 11)அவரது பிணை ரத்து செய்யப்பட்டது.

ஓ’சலிவன் இப்போது விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மத்திய காவல்துறை பிரிவிலிருந்து காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வயர்கார்டு நிறுவனத்துடன் தொடர்புடைய கணக்குகளைப் போலியாகத் தயாரித்த ஐந்து குற்றச்சாட்டுகளுக்காக, கடந்த ஜனவரி மாதம் அவருக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு நிலுவையில் இருந்ததால், அவர் $300,000 பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 9ஆம் தேதியன்று ஓ’சலிவன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் தமது பிணை நிபந்தனைகளை மீறியிருக்கலாம் அல்லது மீறக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோர்டன் ஓ தெரிவித்தார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியில், அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட வனுவாட்டு மற்றும் பிரிட்டிஷ் (UK) கடப்பிதழ்களின் படங்கள் இருந்தன. இதில் உள்ள பிரிட்டிஷ் கடப்பிதழின் எண், 2020 முதல் காவல்துறையினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அவரது உண்மையான கடப்பிதழிலிருந்து மாறுபட்டிருந்தது.

அவரது கைப்பேசியில் வனுவாட்டு நாட்டில் தங்குமிடங்கள் குறித்தும் சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தப்படுவது தொடர்பான சட்டங்கள் குறித்தும் அவர் இணையத்தில் தேடியிருந்தது கண்டறியப்பட்டது.

அவருக்குச் சிங்கப்பூரில் குடும்பமோ, வேலையோ அல்லது நிரந்தரத் தொடர்புகளோ இல்லாததால், அவர் தப்பியோட அதிக வாய்ப்புள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஓ’சலிவனின் வழக்கறிஞர் டிட்டோ ஷேன் ஐசாக், பிணை ரத்து செய்யப்படுவதற்கு உடன்படவில்லை என்றும் தமது கட்சிக்காரரிடம் இது குறித்துப் பேச கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார்.

இருப்பினும், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி இங் செங் தியாம், ஓ’சலிவன் தப்பியோட வாய்ப்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவரது பிணையை ரத்து செய்தார். இந்த வழக்கு மீண்டும் மார்ச் 18ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

குறிப்புச் சொற்கள்