விமான நிலைய ஊழியரைத் திட்டியதாக வெளிநாட்டவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
2a86e401-4a66-4048-86af-ec91b9dedad8
பிரிட்டனைச் சேர்ந்த ஆடவர்மீது விமான நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியது, சொத்துச் சேதம் விளைவித்தது போன்ற குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமை (மார்ச் 17ஆம் தேதி) சுமத்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டிய ஆடவர் ஒருவர் விமானத்துக்குள் ஏறிவிட்டார். அப்பொழுதுதான் தான் கைப்பேசியை தவற விட்டுவிட்டதை உணர்ந்து விமானத்திலிருந்து அவர் இறங்கினார்.

பின்னர் பயணம் மேற்கொள்வதற்காக அனைவரும் கூடியிருந்த கூடத்தைவிட்டு வெளியேறினால் மீண்டும் விமானத்துக்குள் செல்ல முடியாது என்று அவரிடம் கூறப்பட்டது. இதைக் கேள்வியுற்றதும் அந்த ஆடவர் அங்கிருந்த பெண் ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் காலால் உதைத்து விமானத்துக்குச் செல்லும் வான்பாலத்தை சேதப்படுத்தினார்.

அந்த ஆடவர்மீது திங்கட்கிழமை (மார்ச் 17) விமான நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியது, தொல்லை கொடுத்தது, சொத்துச் சேதம் விளைவித்தது போன்ற இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த 57 வயது ஆடவர் விமானத்திற்குள் சென்றபின் தான் கைப்பேசியைத் தவறவிட்டதை உணர்ந்தார். பின்னர் விமானத்திலிருந்து இறங்கி, பயணம் மேற்கொள்ள பயணிகள் தங்கியிருந்த கூடத்திலிருந்த ஊழியரிடம் உதவி கோரினார். அந்தப் பெண் ஊழியர் விமான நிலைய வெளிக்கூடத்தை தொடர்புகொண்டு விசாரித்தபோது அங்கு கைப்பேசி எதுவும் காணப்படவில்லை என்று தெரியவந்தது.

இதை அவரிடம் தெரிவித்த ஊழியர் விமானம் புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதால் பயணிகள் கூடத்திலிருந்து வெளியேறினால் அவர் விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

இதனால் கோபமுற்ற அந்தப் பயணி மேற்கூறிய குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் விமானத்திலிருந்து கீழறக்கப்பட்டு விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தகாத வார்த்தைகளைக் கூறியதற்கு $5,000 வரை அபராதம் அல்லது ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் அவருகு விதிக்கப்படலாம். பொருட்சேதம் விளைவித்த குற்றத்திற்கு ஈராண்டு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்