மறதிநோயால் அவதியுறும் கோடீஸ்வரியை ஏமாற்றிய அண்ணன்

மறதிநோயால் அவதியுறும் கோடீஸ்வரியை ஏமாற்றிய அண்ணன்

2 mins read
515e563f-6f91-4d3f-937e-5a0ba9c86dd9
உயில் உரிமைகளை எழுதுவது, சொத்துகளை நிர்வகிக்க நீடித்த சட்ட அதிகாரத்தை (power of attorney) நியமனம் செய்வது போன்ற செயல்பாடுகளை முன்னேற்பாடு செய்வது முக்கியம். - படம்: பிக்சாபே

சிங்கப்பூர் நிரந்தரவாசியான 87 வயது மாது தாம் $17 மில்லியன் மதிப்புள்ள சொத்தைக் கொண்ட கோடீஸ்வரி என்பதை மறந்து தனிமையில் மிகவும் சிக்கனமான சூழலில் வாழ்ந்து வந்தார்.

அவர் வாழ்ந்த தனியார் வீட்டில் தனக்குத் தேவை ஏற்பட்டால் தவிர யாருடனும் அவர் பழகவில்லை. மாறாக தனியார் கட்டடத்தின் பணியாளர்களே அவருக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து வந்தனர். உதவியாளர் எவரையும் அம்மாது பணிக்கு அமர்த்தவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டுமுதல் மறதிநோய் ஏற்பட்டபின், அந்த மாதின் வீடு அசுத்தமும் குப்பையும் நிறைந்து வாழ் வதற்கு ஏற்றதாக இல்லை என்று கட்டட மேலாளர் தெரிவித்துள்ளார்.

அவரது 62 வயதான ஒரே மகன் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார். அவ்வப்போது தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வர். ஆச்சரியப்படும் விதமாக கடந்த 2022ஆம் ஆண்டில் சம்பந்தம் இல்லாத இருவருடன் தாயார் $200,000 மதிப்புள்ள இணை வங்கிக் கணக்கை திறந்தது மகனுக்குத் தெரிந்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாது தவறி விழுந்து மருத்துவமனையில் சேர்ந்தபோதுதான் அவர் முழுநேரமாக பராமரிக்கப்பட்டார். மருத்துவமனை அவரது மகனையும் 91 வயது அண்ணனையும் தொடர்புகொண்டது.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம், அண்ணன் சிங்கப்பூர் விரைந்து வந்து மாதை மருத்துவ சிகிச்சைகளுக்கு அழைத்துச் சென்றார். அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மாதின் சொத்துகளுக்கு காவலராகவும் அண்ணன் தன்னை நியமித்துக்கொண்டார்.

அவரும் அவரின் மகனும் வஞ்சகமாக மாதின் கையெழுத்தைப் பெற்று, சொத்தை தங்களுக்கு மாற்றிக்கொள்ள முயன்றனர். அதனைக் கண்டுபிடித்த மாதின் மகன், நீதிமன்றத்தின் உதவியை நாடினார்.

மறதிநோய் தாக்கியதால், கையெழுத்திடும் தகுதியை மாது இழந்துவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே ஒருவரின் உயில் உரிமைகளை எழுதுவது, சொத்துகளை நிர்வகிக்க நீடித்த சட்ட அதிகாரத்தை (power of attorney) நியமனம் செய்வது போன்ற அவசியமான செயல்பாடுகளை முன்னேற்பாடு செய்வது முக்கியம் என்பதை இந்த வழக்கு நினைவூட்டுகிறது.

குறிப்புச் சொற்கள்