பிடோக் ரெசவோர் வட்டாரத்தில் உள்ள புளோக் 611ல் வசிக்கும் சில குடியிருப்பாளர்களின் வீட்டுக் குழாய்களில் சில நாள்களுக்கு முன்பு திடீரெனப் பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால், அவர்கள் தங்களது குடிநீர் தூய்மை குறித்து கவலை அடைந்தனர். செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 16) குடியிருப்பாளர் ஒருவரிடமிருந்து புகார் வந்ததை அடுத்து, பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) உடனடியாகச் செயல்பட்டது.
அதே நாள் மாலை 5:30 மணியளவில், பியுபி அதிகாரிகளுடன் அந்த வட்டாரத்தை நிர்வகிக்கும் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றமும் இணைந்து பாதிக்கப்பட்ட குடியிருப்பாளரின் வீட்டில் கூட்டுப் பரிசோதனை நடத்தியது.
அதே மாடியில் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு வீடுகளின் குழாய்களிலும் முக்கியக் குடிநீர்க் குழாய்களிலும் தண்ணீரைத் திறந்துவிட்டுச் சுத்தம் செய்யும் ‘பிளஷிங்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பியுபி முதன்மைக் குழாய்களிலிருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில், நீரின் தரத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நகர மன்றமும் அதன் உள்விநியோகக் குழாய்களைச் சுத்தம் செய்ததை அடுத்து, தண்ணீரின் நிறமாற்றம் சீரானது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவரான புவா என்பவர், ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விட்டுவிட்டுப் பழுப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததாகவும் அதில் உலோக வாசனை வீசியதாகவும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற நிலைமை ஏற்பட்டபோது, அது வழக்கமான தண்ணீர்த் தொட்டிச் சுத்தம் செய்யும் பணியாக இருக்கும் என அவர் நினைத்துள்ளார். ஆனால், இம்முறை குழாயைத் திறந்துவிட்டுச் சுத்தம் செய்த பிறகும், தண்ணீர் தொட்டி மற்றும் கழிவறைகளில் படிவுகள் மீதம் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்சமயம் குழாய்களில் சுத்தமான தண்ணீர் வருவதை உறுதிப்படுத்திய குடியிருப்பாளர், நீர் மாதிரிகளின் சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய பியுபி மற்றும் நகர மன்ற அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

