தமது லட்சியப் பயணத்தைத் தொடங்க, கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி சிங்கப்பூரிலிருந்து பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகருக்குப் புறப்பட்டார் 25 வயது பி அரவிந்த் பிள்ளை.
அவர் குடும்பத்தினரிடம் பாசத்தோடு விடைபெற்றபோது ஓராண்டில் அவர் நிரந்தரமாக விடைபெறுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
பெல்ஜியமில் கணினிப் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, வாழ்வில் பெரிய நிலையை அடைவார் என அவரும் அவரின் குடும்பத்தினரும் கட்டியிருந்த கனவுக்கோட்டை, இவ்வாண்டு நவம்பர் 7ஆம் தேதி நிகழ்ந்த அசம்பாவிதத்தால் சிதைந்தது.
அரவிந்த் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி, அவரின் குடும்பத்தினரையும் நண்பர்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்தியது.
செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப் பள்ளி, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்து முடித்த பின்பு தேசிய சேவையின்போது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையில் சேவையாற்றினார் அரவிந்த். படிக்க வெளிநாட்டுக்குச் செல்வது உள்ளிட்டு, தம் குடும்பத்துக்குப் பலமுறை பெருமை சேர்த்தவர்.
“மிகவும் மரியாதையானவர். சிரித்த முகத்துடன் இருப்பதுடன் அனைவருக்கும் உதவ முன்வருபவர்,” என நினைவுகூர்ந்தார் அரவிந்தின் பெரியப்பா ஜகன் நாதன்.
“நாங்கள் எப்படி இருக்கிறோம் என எங்களிடம் அடிக்கடி கேட்பார். அவர் பிரசல்ஸ் செல்வதற்கு முன்பும் என்னிடம் பேசினார்,” என்றார் அரவிந்தின் பெரியம்மா.
“கர்ணனைப் போன்றவர். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனே செய்வார். நெடுநாள் அவரைப் பார்க்காவிட்டாலும் நேற்று பார்த்ததைப் போல பழகுவார்,” என்றார் அவரது ஒன்றுவிட்ட சகோதரி.
தொடர்புடைய செய்திகள்
“நாங்கள் வெவ்வேறு பாதைகளில் சென்றபோதும் என் குத்துச்சண்டைப் போட்டிக்கு வந்து எனக்கு உற்சாகமளித்தார். இந்த அசம்பாவிதம் நடப்பதற்கு இரு நாள்கள் முன்புகூட அவர் என் நினைவுக்கு வந்தார்.
“நான் சில நாள்களில் மற்றொரு போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதால் அவரை அழைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். அதற்குள் இது நடந்துவிட்டது. அந்த நல்ல மனிதருக்கு இத்தகைய முடிவு ஏற்றதல்ல. அவரின் பெற்றோருக்காகவும் நான் வருந்துகிறேன்,” என்றார் அவருடன் செயின்ட் ஆண்ட்ரூசில் படித்த அஃப்ராஸ், 25.
“என் சகோதரராகவும் என் பிள்ளைகளுக்குத் தெய்வத் தந்தையாகவும் அவர் என்றும் நிலைப்பார்,” என்றார் அவருடன் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் படித்த எர்னஸ்ட், 25.
“அவர் சிறுவயதிலேயே மிகவும் பொறுப்பானவர். சிறுவர்கள் மத்தியில் ஒரு பெரியவர் போன்றவர்,” என நினைவுகூர்ந்தார் செயின்ட் ஆண்ட்ரூஸ் முன்னாள் தலைமைச் சட்டாம்பிள்ளை ஜெரமி டேபன்ஸ்கி, 26.
“அவர் துடிப்புடன் காணப்படுவார். எனக்கு மிகவும் பிடித்த மாணவர். பள்ளியை விட்டுச் சென்றாலும் ஆசிரியர் தினத்துக்கு என்னைக் காண வருவார்,” என்றார் அரவிந்தின் முன்னாள் ஆசிரியை, செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளியின் திருமதி சாந்தி.
“அவரைக் காண இத்தனை பேர் வந்திருப்பதே அவர் எவ்வளவு பாசமானவர் என்பதைக் காட்டுகிறது,” என்றார் அரவிந்தின் சகோதரி.
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு, பிரசல்ஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்பிற்கு நன்றி கூறினார் அரவிந்தின் தந்தை பாலா.
“வெளியுறவு அமைச்சின் உதவியின்றி என் மகனின் உடலை இவ்வளவு விரைவாக என்னால் சிங்கப்பூரில் பெற்றிருக்க முடியாது. அமைச்சின் ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்றார் திரு பாலா.
நவம்பர் 11ஆம் தேதி மாலை அரவிந்தின் நல்லுடல் மண்டாய் தகனச்சாலைக்குக் கொண்டுசெல்லப்படும்.

