சாமுராய் வாள் தாக்குதல்: ஆடவருக்கு 18 மாதச் சிறை, 6 பிரம்படிகள்

சாமுராய் வாள் தாக்குதல்: ஆடவருக்கு 18 மாதச் சிறை, 6 பிரம்படிகள்

1 mins read
dd8d51e0-ad2f-4c0d-8a03-8b37d2858cf8
பாதசாரியை வாளால் தாக்கிய ஃபாடில் யூசோப், அவ்வழியாகச் சென்ற கார்களையும் சேதப்படுத்தினார். படம்: ROADS.SG/FACEBOOK -

புவாங்காக் ஸ்குவேர் கடைத்தொகுதிக்கு அருகில் சாமுராய் வாளை வீசி பாதசாரி ஒருவரைக் காயப்படுத்தி, அவ்வழியாகச் சென்ற கார்களையும் வாளால் அடித்துச் சேதப்படுத்திய ஆடவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் திரு குமாரபேலி அரச்சிகே அமிலா சிந்தனாவை 38 வயது ஃபாடில் யூசோப் வாளால் தாக்கி காயப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட ஆடவரின் இடது கரத்திலும் தோள்பட்டையிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

பிறர் உயிருக்கு ஆபத்து விளைவித்தல், படுகாயம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தை வைத்திருத்தல், ஆயுதம் பயன்படுத்தி வேண்டுமென்றே பிறருக்குக் காயம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஃபாடில் ஒப்புக்கொண்டார்.

தீர்ப்பு அளிக்கப்பட்டபோது மேலும் இரு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

அந்த 63 சென்டிமீட்டர் வாளுடன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு ஃபாடில் சில மாத்திரைகளை உட்கொண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால் அவை என்ன மாத்திரை என்று அது குறிப்பிடவில்லை.

ஃபாடிலின் செயலால் சேதமடைந்த கார்களைப் பழுதுபார்க்க $2,400க்கும் மேல் செலவானது.

திரு சிந்தனாவை ஃபாடில் தாக்கியபோது வழிப்போக்கர்கள் சிலர் அவரை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் வரும்வரை காத்திருந்தனர்.

ஃபாடிலைக் கைது செய்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி மஞ்சள் மாத்திரைகளைக் கொண்ட இரு பைகளைப் பறிமுதல் செய்தனர். திரு சிந்தனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. மருத்துவக் கட்டணத்துக்காக திரு சிந்தனா $110 செலவழித்தார்.