ஏறத்தாழ 1.3 மில்லியன் சிங்கப்பூரர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் $800 சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.
அதில் $500 பற்றுச்சீட்டு வரும் மே மாதமும் $300 பற்றுச்சீட்டு 2026 ஜனவரி மாதமும் வழங்கப்படும்.
இதற்கு முன்னர் வழங்கப்பட்டதைப்போல பற்றுச்சீட்டுகளில் பாதியை பேரங்காடிகளிலும் மீதியை குடியிருப்பு வட்டாரக் கடைகளிலும் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக, பயனீட்டுச் செலவுகளைச் சமாளிக்க குடும்பங்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படுகிறது.
தகுதி உள்ள ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்துக்கும் இந்த நிதி ஆண்டில் $760 வரை பயனீட்டுக் கட்டணக் கழிவு வழங்கப்படும்.
வழக்கமான கட்டணத் தள்ளுபடியைவிட இது இருமடங்கு. இந்தச் சலுகை மூலம் 950,000 சிங்கப்பூரர் குடும்பங்கள் பலனடையும்.
மேலும், குழந்தைகளுடன் உள்ள குடும்பங்கள் செலவுகளைச் சமாளிக்க கூடுதல் உதவிகளைப் பெறும். குறிப்பாக, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் தனிப்பட்டோருக்கும் அந்த உதவி கிடைக்கும்.
12 வயது வரை உள்ள ஒவ்வொரு சிங்கப்பூர் குழந்தைக்கும் பிள்ளைகளுக்கான ‘லைஃப்எஸ்ஜி’ (LifeSG) சிறப்புத்தொகை வழங்கப்படும். இது, கடந்த ஆண்டு தேசிய சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டதைப்போன்றது.
தொடர்புடைய செய்திகள்
‘பேநவ்’, ‘நெட்ஸ் கியூஆர்’ வழி பணம் பெற்றுக்கொள்ளும் இணைய வர்த்தகங்களிலும் கடைகளிலும் பொருள்களை வாங்க அதனைப் பயன்படுத்தலாம்.
இவ்வாண்டு 13 முதல் 20 வயது வரை உள்ளோருக்கு அவர்களின் எடுசேவ் கணக்கில் $500 வரவு வைக்கப்படும்.
அல்லது அவர்களின் உயர்நிலைக் கல்விக்குப் பிந்திய கல்விக் கணக்கில் போடப்படும்.
அனுமதிக்கப்பட்ட கல்வி தொடர்பான செலவுகளுக்கு அவர்கள் அதனைப் பயன்படுத்தலாம்.
பெரும் நிதி நெருக்கடியில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவும்பொருட்டு ஏப்ரல் முதல் காம்கேர் ஆதரவு அதிகரிக்கப்படுகிறது.
நீண்டகால உதவித் திட்டத்தில் இருக்கும், ஒருவரைக் கொண்ட குடும்பம் மாதந்தோறும் $120 கூடுதல் உதவி பெறும். அதன் மூலம் அவர்களுக்கான மாதாந்தர உதவி $760 ஆக அதிகரிக்கும்.
அதேபோல, குறுகிய கால மற்றும் இடைப்பட்ட கால உதவித் திட்டத்தில் இருப்போருக்கும் இதற்கு முன்னர் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் குடும்பத்தின் அமைப்பு, தேவை மற்றும் வருவாயைப் பொறுத்து அதிகரிக்கப்படும்.
அதேநேரம், தேவை உள்ள குடும்பங்களை ஆதரிக்கும் சமூக அமைப்புகளுக்கான அரசாங்க உதவியும் அதிகரிக்கப்படும்.
சில ஓய்வூதியக்காரர்கள் ஒவ்வொரு மாதமும் பெறும் சிங்கப்பூர்ப் படித்தொகை ஏப்ரல் முதல் $350லிருந்து $390க்கு அதிகரிக்கப்படும்.
சிறிய ஓய்வூதியத் தொகைகளைப் பெறுவோருக்கு இது பொருந்தும். மாதாந்தர ஓய்வூதிய வரம்பும் $1,320க்கு அதிகரிக்கப்படுகிறது.