2024 நிதி ஆண்டில் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் சிங்கப்பூரின் தேசிய வருவாய் அதிகரித்து உள்ளது. நிறுவன வருவாய் வரி அதிகமாக வந்தது அதற்கு முக்கிய காரணம்.
நிறுவன வருவாய் வரி 2024 நிதி ஆண்டில், ஆண்டு அடிப்படையில் 6.5 விழுக்காடு அதிகரித்து $30.9 பில்லியன் ஆனது. எதிர்பார்க்கப்பட்ட $28 பில்லியனைக் காட்டிலும் இது அதிகம்.
அதிகமான வரி வசூலிப்பு சிங்கப்பூரின் நிதி நிலைமை மேம்பட உதவி உள்ளது. அவ்வாறு மேம்பட்டதால், 2023 நிதி ஆண்டில் $2.6 பில்லியன் பற்றாக்குறையாக இருந்த நிதி நிலைமை, கடந்த நிதி ஆண்டில் $6.4 பில்லியன் உபரி என்னும் அளவுக்கு அதிகரித்தது.
அந்தத் தொகை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 0.9 விழுக்காடு.
2024 நிதி ஆண்டில் நிறுவன வருவாய் வரி வசூலிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1 விழுக்காடு என்னும் அளவைத் தொடும் என்று மதிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டுகளில் வழக்கமாக மதிப்பிடப்பட்ட 3.2 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம்.
நிறுவன வருவாய் வரி அதிகம் வசூலானதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நிதி மற்றும் மொத்த வர்த்தகத்தில் ஏற்பட்ட தொழில்துறை சார்ந்த சுழற்சி காரணிகளும் அதனுள் அடங்கும்.
மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டு முடிவுகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் அந்தக் காரணங்களில் ஒன்று. பன்னாட்டு நிறுவனங்கள் அதிக மதிப்புள்ள வர்த்தக நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் போன்ற நிலையான மையங்களையே நாடுகின்றன.
சிங்கப்பூரின் மொத்த வருவாய் அதிகரிக்க ஆகப்பெரிய ஒரு பங்களிப்பாக நிறுவன வருவாய் வரி அமைந்துள்ளது. இது எதிர்பார்க்கப்படாத மாற்றம். நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பைக் காட்டிலும் அந்த வரி வசூலிப்பு அதிகமாக இருந்தது. நிகர முதலீட்டு வருவாய் பங்களிப்பு 2023ஆம் ஆண்டு $23 பில்லியனாகவும் அதற்கு அடுத்த ஆண்டு $24 பில்லியனாகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அதிகமானது மற்றொரு காரணம். 2024 நிதி ஆண்டில், ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 23.8 விழுக்காடு அதிகரித்து $20.6 பில்லியன் ஆனது.
தனியார் நுகர்வு, எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் வலுவான வளர்ச்சியை எட்டியது ஜிஎஸ்டி வரி வசூல் அதிகமானதற்கு முக்கிய காரணம் என்று நிதி அமைச்சு கூறி இருந்தது.
மற்றொரு காரணம், தனிநபர் வருவாய் வரி. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அந்த வரி வசூல் 8.3 விழுக்காடு அதிகரித்து $19 பில்லியன் ஆனது. இயல்பான ஊதிய வளர்ச்சி சிறந்த முறையில் பதிவானது.