தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தனியார் வீடுகளில் வசிக்கும் மூத்தோர் உட்பட எல்லா மூத்தோருக்கும் கூடுதல் உதவி

3 mins read
e35ba393-325c-4c9e-b0c8-216e63e180fc
நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படுவோருக்கான உதவியும் அதிகரிக்கிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மூத்தோருக்கு உகந்த அம்சங்களை வீட்டில் பெற அதிக உதவிகளும் அவர்களின் மருத்துவத் தேவைகளுக்கான நிதி உதவியும் வழங்கப்படும் என்று பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

மேலும், நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படுவோருக்கான உதவியும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துடிப்பான மூத்தோருக்கான மேம்பாட்டுத் திட்டம் (Ease) பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டபோது இந்தச் சலுகைகளைத் தெரிவித்தார். தற்போது வீவக வீட்டில் வசிப்போருக்கு மட்டும் பொருந்தும் அந்தத் திட்டம் இனி 2028ஆம் ஆண்டு வரை மூன்றாண்டு காலத்துக்கு தனியார் வீடுகளில் வசிக்கும் மூத்தோருக்கும் விரிவுபடுத்தப்படுகிறது என்பதே அந்த அறிவிப்பு.

“நமது மூத்தோர் துடிப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்கத் தேவையான வசதிகளைச் செய்து தருவதே நமது முன்னுரிமை. நமது திட்டங்களில், மூத்தோருக்கு மிகவும் சாதகமான வாழ்க்கைச் சூழலை அமைத்துத் தருவதும் அடங்கும்,” என்று திரு வோங் கூறினார்.

சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு அதிக உதவி வழங்கப்படும்.

55 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட, குறைந்த வருமானம் ஈட்டும் மூத்தோரின் மெடிசேவ் கணக்கில் நிரப்பப்படும் ஒவ்வொரு வெள்ளிக்கும் அரசாங்கமும் அதற்கு ஈடாக வெள்ளிக்கு-வெள்ளி வழங்கும். இருப்பினும், ஓராண்டு உதவித்தொகையின் அதிகபட்ச வரம்பு $1,000 ஆகும்.

இந்த உதவித் திட்டம் ஐந்தாண்டுகளுக்கு நடப்பில் இருக்கும்.

அதற்குத் தகுதிபெற, சராசரி மாத வருமானம் $4,000 அல்லது அதற்குக் கீழ் இருக்க வேண்டும். $21,000 ஆண்டு மதிப்பு அல்லது அதற்கும் குறைவான மதிப்புடைய ஒரே ஒரு சொத்து மட்டும் அவரிடம் இருக்க வேண்டும்.

அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு சேமிப்புத் தொகையில் பாதிக்கும் குறைவான மெடிசேவ் இருப்பு அவரிடம் இருக்க வேண்டும். 2025ஆம் ஆண்டுக்கான அடிப்படை சுகாதாரப் பராமரிப்பு சேமிப்புத் தொகை $75,500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடப்பில் உள்ள வெள்ளிக்கு வெள்ளி ஓய்வுக்கால சேமிப்புத் திட்டத்தோடு சேர்த்து இந்த உதவித் திட்டமும் அவர்களுக்குப் பொருந்தும். ஓய்வுக்காலக் கணக்குகளில் $106,500க்கும் குறைவான இருப்பு உள்ளோருக்கு அரசாங்கம் வெள்ளிக்கு வெள்ளி பணம் நிரப்பும் திட்டம் தற்போது நடப்பில் உள்ளது.

வெள்ளிக்கு வெள்ளி உதவி மானியத்தின் அதிகபட்ச வரம்பு இந்த ஆண்டு $600லிருந்து $2,000க்கு உயர்த்தப்படுகிறது. வாழ்நாள் முழுவதுக்குமான அதிகபட்ச வரம்புத் தொகையும் $20,000 என நிர்ணயிக்கப்படுகிறது.

இருப்பினும், வெள்ளிக்கு வெள்ளி உதவி மானியத் தொகை வரிக் கழிவுச் சலுகைக்குத் தகுதிபெறாது. அதற்கான அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்படுகிறது. எனவே 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களை அனுபவிக்கலாம்.

நீண்டகாலப் பராமரிப்பு தேவைப்படும் பலவீனமான, நோய்வாய்ப்பட்ட மூத்தோருக்கும் அதிக உதவி கிடைக்கும். அவர்களுக்கான அரசாங்க உதவி 15 விழுக்காட்டுப் புள்ளிகள்வரை அதிகரிக்கப்படும்.

தற்போது அந்த உதவி விகிதம், சிங்கப்பூரர்களுக்கு 20 விழுக்காடு முதல் 75 விழுக்காடு வரையும் நிரந்தரவாசிகளுக்கு 10 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையும் உள்ளன.

1969ஆம் ஆண்டிலோ அதற்கு முன்னரோ பிறந்த குடிமக்கள் நீண்டகாலப் பராமரிப்பு தேவையில் இருந்தால் அவர்களுக்கான உதவித்தொகை 20 விழுக்காடு வரை அதிகரிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்