அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை முக்கியமான இந்திய வர்த்தகத் தலைவர்களுடன் வட்டமேசைச் சந்திப்பு ஒன்றை அண்மையில் நடத்தியது.
அடுத்த நிதியாண்டில் நிதி அமைச்சரின் வரவுசெலவுத் திட்ட அறிக்கைக்கு முன்னதாக வணிகச் சமூகத்தின் முக்கியக் கவலைகள் குறித்த கருத்துகளைச் சேகரிப்பதும் வர்த்தகத் தொழிற்சபையின் ஒருங்கிணைந்த பரிந்துரைகளை நிதி அமைச்சிடம் சமர்ப்பிப்பதும் இதன் நோக்கமாகும்.
அக்டோபர் 28ஆம் தேதியன்று நடைபெற்ற வட்டமேசைச் சந்திப்பில் சிங்கப்பூரில் உள்ள 600க்கும் மேற்பட்ட வர்த்தகங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், முக்கிய இந்திய வணிகச் சங்கங்களின் தலைவர்கள், தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்கள், சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பயனீட்டாளர் நடத்தை மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படும் தொழில்துறை மாற்றங்கள், தொடர்ச்சியான செலவு அழுத்தங்கள், மனிதவளப் பற்றாக்குறை போன்றவற்றை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.
சந்திப்பில், அதுகுறித்துப் பேசக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. வர்த்தகங்கள் எஸ்-பாஸ் அனுமதி அட்டை வைத்திருக்கும் ஊழியருக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது, தீர்வை அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறை குறித்த கவலைகளை முன்வைத்தன.
தீராத ஆள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளுக்கான உள்ளூர், வெளிநாட்டு ஊழியர் விகிதத்தை மறுஆய்வு செய்தல், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் வேலைப்பளுவின்போது நீக்குப்போக்கான அல்லது பருவகால வேலை அனுமதிச் சீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், நுண் நிறுவனங்கள், மரபுடைமை வணிகங்களுக்கான மனிதவள விதிகளை வேறுபடுத்துதல் போன்ற பரிந்துரைகளைத் தொழிற்சபை முன்வைத்தது.
பணவீக்கத்தைச் சமாளிக்க வர்த்தகத் தொழிற்சபை சொத்து வரித் தள்ளுபடிகள் அல்லது லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்திற்கு ஒன்றிலிருந்து இரண்டு விழுக்காட்டு வரி வருவாயைத் திரும்ப வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துதல், லிட்டில் இந்தியாவை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக அறிவிப்பது குறித்துப் பரிசீலித்தல் போன்றவற்றைப் பரிந்துரைத்தது.
திறன் பயிற்சி மேற்கொள்வதை மேம்படுத்தும் வகையில் பயிற்சி நிதியை எளிமைப்படுத்தப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு அல்லது ஊதிய ஆதரவுத் திட்டங்களுக்குத் திருப்பிவிடுதல், நடுத்தர வயதில் வாழ்க்கைத் தொழிலை மாற்றுபவர்களுக்கும், ஓய்வுபெற்றவர்களுக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவிநிதியை அதிகரித்தல், படிப்படியான சம்பள உயர்வுத் திட்டத்தின் உச்சவரம்பை $3,000லிருந்து $5,000ஆக உயர்த்துதல், உள்நாட்டிலேயே பயிற்சிகளை வழங்கும் முதலாளிகளுக்கான மானியங்களை விரிவுபடுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அதிகம் தேவைப்படுவோரை இலக்காகக் கொண்ட சீரமைக்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டு வழங்கல் முறை, மரபுடைமை வர்த்தகப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான செலவுகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குதல், பணப்புழக்க அழுத்தங்களைக் குறைப்பதற்காக ‘மைக்ரோ லோன்’ (micro loan) எனப்படும் புதிய வர்த்தகங்களுக்கான குறைந்த வட்டியுடன்கூடிய கடன்களை வழங்குதல், ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுச் சந்தாக்கள் உயர்ந்து வருவது குறித்த மறுஆய்வு போன்றவையும் பரிந்துரைக்கப்பட்டன.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மையை நோக்கி நகர பசுமைச் சாதனங்கள், சூரியவொளித் தகடுகளை நிறுவுவதற்கான ஊக்கத்தொகைகளை வழங்குதல், நிலைத்தன்மை அளவுகோல்களைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கரியமில வாயு வரித் தள்ளுபடிகள் வழங்குதல், சமூகத்தால் முன்னெடுக்கப்படும் காலநிலை மாற்றத் திட்டங்கள், இளையர்களால் வழிநடத்தப்படும் முன்முயற்சிகளுக்கு நிதி வழங்குதல் போன்றவற்றை வர்த்தகத் தொழிற்சபை முன்மொழிந்தது.
தொடக்க நிறுவனங்கள் பல இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டங்களை வரவேற்ற போதும், ஆரம்பக்கட்ட நிறுவனங்களுக்கு ‘மைக்ரோ கிராண்ட்’ (micro grant) எனப்படும் சிறிய அளவிலான மானியங்கள் அல்லது மாற்றத்தக்க கடன் பத்திரத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், தகுதி நிலையை முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்க்கும் வசதி கொண்ட ஒருங்கிணைந்த ஒற்றை மின்னிலக்க மானியத் தளத்தை உருவாக்குதல், சமூகத் தாக்கம், கலாசாரத் தொழில்நுட்ப முயற்சிகளுக்காக ஒரு சமூகக் கண்டுபிடிப்பு நிதியை நிறுவுதல், தனியார் துறை புதுத்தொழில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ஊக்கத்தொகைகள் அல்லது சலுகைகளை வழங்குதல் போன்ற உதவிகளையும் எதிர்பார்த்தன.
உலகளாவிய நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் போட்டித்தன்மை மிக்கவையாகவும், புத்தாக்கமிக்கவையாகவும் எதிர்காலத்திற்குத் தயாராகவும் இருப்பதை உறுதிசெய்யும் பொதுவான நோக்கத்துடன், ஆக்கபூர்வமான பங்காளித்துவ உணர்வோடு இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபை கூறியது.

