தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனைவருக்கும் நன்மையளிக்கும் பட்ஜெட்

2 mins read
7e950ebc-1ce4-4905-a761-bf9fd6226b6b
வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய வருகை தந்த பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரவு செலவுத் திட்ட அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தொடக்க உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:

2025ஆம் ஆண்டு நமது சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு. நமது தேசத்தை உருவாக்குவதில் நமது தலைமுறையினர் பங்களித்த துணிவையும் மீள்திறனையும் பிரதிபலிக்கும் மிகவும் முக்கியமான ஆண்டு.

60 ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறுபட்டு உள்ளது.

ஓர் இளமையான நாடாக நாம் பல சவால்களை எதிர்நோக்கினோம். இனப் பதற்றங்கள் அதிகமாக இருந்தது. வேலையின்மை பரவலாக இருந்தது.

இருப்பினும், நமது முன்னோடித் தலைமுறையினர் நமது தேசத்தை உருவாக்கினர்.

தற்போது நாம் உலகளாவிய புதிய போட்டியை எதிர்கொள்கிறோம். உலக நாடுகளிடையே பொருளியல், வர்த்தகத் தடுப்புச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன.

மீண்டும் நாம் கொந்தளிப்பான வெளிப்புறச் சூழலைச் சமாளிக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டி உள்ளது.

இதுவரை நாம் நல்லமுறையில் செயல்பட்டு வந்துள்ளோம். கொவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்த நாம், கடந்த ஆண்டில் வலுவாகக் கால்பதித்தோம். நமது பொருளியல் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. அதேநேரம் பணவீக்கம் தொடர்ந்து சரிந்துள்ளது.

அதற்கு ஏற்ப சிங்கப்பூரர்கள் நல்ல சம்பள உயர்வு பெற்றார்கள் . நமது ஊழியர்களின் இடைநிலை வருவாய், பணவீக்கத்திற்கும் அப்பால் 3.4 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

அரசாங்க வரிகளைக் கழித்த பின்னர், வருவாய் ஏற்றத்தாழ்வு 2000ஆம் ஆண்டிற்குப் பிறகு சரிந்துள்ளது.

இவை எல்லாம் நமது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நல்ல அறிகுறியை ஏற்படுத்தி உள்ளன.

ஆயினும், உலகளாவிய நிச்சயமற்ற போக்கையும் வளர்ச்சி குறையும் அபாயங்களையும் நாம் சந்திக்கிறோம்.

ஒரு சிறிய, திறந்த பொருளியல் என்ற முறையில் சிங்கப்பூரும் அதன் தாக்கத்தை உணரும்.

அதனால், இவ்வாண்டு சிங்கப்பூரின் வளர்ச்சி 1 விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் . அதேநேரம், பணவீக்கம் சராசரியாக 1.5 விழுக்காட்டுக்கும் 2.5 விழுக்காட்டுக்கும் இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

60 ஆண்டுக்கு முன்னர் இருந்ததைவிட நாம் இப்போதும் மிகவும் வலுவாக உள்ளோம்.

இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இப்போதைய சவால்களை மட்டுமின்றி வருங்காலச் சவால்களையும் சமாளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

2025ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் எல்லா சிங்கப்பூரர்களையும் உள்ளடக்கி உள்ளது.

செலவுகளால் ஏற்படும் அழுத்தத்தைச் சமாளிப்பது, நமது வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வது, வாழ்நாள் முழுவதும் ஊழியர்களுக்குத் திறனளிப்பது, நீடித்து நிலைக்கவல்ல நகரத்தை உருவாக்குவது, பரிவுமிக்க அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைப் பராமரிப்பது, ஒருங்கிணைந்த மக்களாக நடைபோடுவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த வரவுசெலவுத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்