சிங்கப்பூர் ஊழியரணியை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கும் நோக்கத்துடன் வரவுசெலவுத் திட்டம் 2026ல் முன்வைக்கப்பட்ட திட்டங்களை மனிதவளத் துறை நிபுணர்களும் தொழில்துறையினரும் வரவேற்றுள்ளனர்.
வெளிநாட்டுத் திறனாளர்களை அதிகரிக்கும்போது எண்ணிக்கைக்குப் பதிலாகத் தரத்தை அளவுகோலாகப் பார்ப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை அது காட்டுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்கள் மனிதவளங்களையும் உத்திகளையும் மீண்டும் மதிப்பீடு செய்துவரும் நிலையில், உருமாற்ற நடவடிக்கைகளால் ஆபத்துகளும் செலவுச் சிக்கல்களும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.
அடுத்த ஆண்டிலிருந்து வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கத் திட்டமிடும் நிறுவனங்கள் கூடுதல் செலவைச் சந்திக்க வேண்டியிருக்கும். அண்மை வரவுசெலவுத் திட்டத்தில் எம்ப்ளாய்மென்ட் பாஸ் எனும் வேலை அனுமதிச் சீட்டுக்கான குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளம் $5,600லிருந்து $6,000க்கு உயர்த்தப்படும் என்றும் எஸ் பாசுக்கான குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளம் $3,300லிருந்து $3,600க்கு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியரணி உயர்ந்த தரத்தில் இருப்பதைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிவதாகச் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் தெரிவித்தது. ஆனால் அதனால் ஏற்படக்கூடிய கூடுதல் வணிகச் செலவுகள் குறித்து ஏராளமான நிறுவனங்கள் கவலைப்படுவதாக அது குறிப்பிட்டது.
“பொருளியல் நிலவரத்திற்கேற்ப, அரசாங்கம் அதை நடைமுறைப்படுத்தும் என்று நம்புகிறோம்,” என்று முதலாளிகள் சம்மேளனம் கூறியது.
அரசாங்கம் துறைவாரியாக நீக்குப்போக்குடன் செயல்படுவதற்கு அது வேண்டுகோள் விடுத்தது.
மாற்றங்கள், உற்பத்தித் துறையினரின் செலவை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சிங்கப்பூர் உற்பத்தித் துறைச் சம்மேளனம் தெரிவித்தது. ஏற்கெனவே 66.7 விழுக்காட்டு நிறுவனங்கள், சம்பள உயர்வைச் சமாளிக்கப் போராடுவதாக அது சொன்னது.
“செலவு கூடுவதால் நீண்டகாலப் போட்டித்தன்மை பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை எங்களுக்கு உள்ளது,” என்று உற்பத்தித் துறைச் சம்மேளனம் கூறியது. அதன் அண்மைக் கருத்தாய்வில் பங்கெடுத்த நிறுவனங்களில் 57.9 விழுக்காட்டுக்கு மனிதவளத்தையும் திறனாளர்களையும் மேம்படுத்துவதே முக்கியச் சவாலாய் இருந்ததாக உற்பத்தித் துறைச் சம்மேளனம் குறிப்பிட்டது.
இந்நிலையில், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும்போது இன்னும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார் தொழில்நுட்பத் துறையில் மனிதவளத் துறை வல்லுநராக இருக்கும் திரு கைரில் பஹாருதின்.
“நடுநிலை வேலைகள், ஒப்பந்தப் புதுப்பிப்புகள், சம்பளப் படிநிலைகள் முதலியவற்றைக் கையாள்வதில் நிறுவனங்கள் அதிக நெருக்கடியைச் சந்திக்க நேரிடலாம். திட்டமிட்டதற்கு முன்பாகவே அவை சம்பளக் கட்டமைப்பைச் சரிசெய்ய வேண்டி வரலாம்,” என்றார் அவர்.
வெளிநாட்டுத் திறனாளர்களை வேலைக்கு எடுப்பதற்கான நிபந்தனைகள் கூடும்போது ஊழியரணியை மிகவும் கவனத்துடன் திட்டமிடுவது அவசியம் என்றார் மனிதவளத் தொழில்நுட்ப நிறுவனமான எப்பிட்டோம் குளோபலின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் சான்.

