உதவி தேவைப்படுவோருக்கு உணவு வழங்கி ஆதரவு நல்கும் வாய்ப்பை இயோ சூ காங் குடியிருப்பாளர்கள் பெறுவர் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
சிங்கப்பூரின் #ஃபார்வர்ட்எஸ்ஜி பட்டியலின் ஓர் அங்கமாக மேலும் பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க இயோ சூ காங் சமூக ‘பிளாஞ்சா-எ-மீல்’ பற்றுச்சீட்டுத் திட்டமும் கட்டுப்படியான உணவுத் திட்டமும் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
“நம்மைச் சுற்றி இருப்போருக்கு ஆதரவளித்து அவர்களையும் உயர்த்துவதற்கான ஒவ்வொரு கூட்டு முயற்சியும் நமது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும்,” என்றார் திரு லீ.
அங் மோ கியோ அவென்யூ 4ல் புளோக் 610, 631 இரண்டுக்கும் இடையிலான கூரையுடன் கூடிய இணைப்பு கட்டி முடிக்கப்பட்டது குறித்தும் அவர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அக்கம்பக்க கடைகளுக்கும் உணவங்காடி நிலையத்திற்கும் செல்லச் சாலையைக் கடக்கும் குடியிருப்பாளர்களுக்கு இனி நிழல் இருக்கும் என்றார் அவர்.
அத்துடன் மூன்றாண்டு புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு வரும் மாதங்களில் புதிய சமூக மன்றம் திறக்கப்பட உள்ளதையும் இயோ சூ காங் குடியிருப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கலாம் என்றார்.
குடியிருப்பாளர்களை நன்கு கவனித்துக்கொள்வதற்காக திரு லீ, அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான யிப் ஹொன் வெங் மற்றும் அவரின் குழுவுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். புதிய வசதிகளையும் திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டார் மூத்த அமைச்சர் லீ.

