கூடுதலான வீடுகள் கட்டுங்கள் அல்லது குறைந்த குடியுரிமைகள் வழங்குங்கள்: ஹேசல் புவா

3 mins read
dc3e5b8e-6f6c-4851-9d37-693a700396ab
வீட்டுப் பற்றாக்குறை குறித்துப் பேசிய சிமு கட்சியின் முதலாம் துணைத் தலைவர் ஹேசல் புவா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம் வீடுகளைக் கட்டும் வேகம் இளம் தம்பதியரின் தேவைகளுக்கேற்ப இல்லை என்றும் வீடுகளின் பற்றாக்குறை தீரும்வரை இத்தனை புதிய குடியுரிமைகளை வழங்கக்கூடாது என்றும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (சிமுக) முதலாம் துணைத் தலைவர் ஹேசல் புவா கூறியுள்ளார்.

மே 1ஆம் தேதி நடந்த சிமுகவின் பிரசாரக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

சிமுக உண்மைகளைக் கண்டுகொள்ளாமல் பேசுவதாக அமைச்சர் டெஸ்மண்ட் லீ முன்பு கூறியிருந்ததற்குப் பதிலடி தந்தார் அவர்.

“2021க்கும் 2025க்கும் இடையே வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) 102,300 வீடுகளை, அதாவது ஆண்டுக்கு 20,460 வீடுகளை அறிமுகப்படுத்தியது.

“கொவிட்-19ஆல் கட்டுமானத்தில் தாமதமடைந்த வீடுகள் அனைத்தும் கட்டப்பட்டுவிட்டன என்றும் 2026 முதல் 2027 வரை ஆண்டுக்கு 15,000 வீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.

“இது போதுமா? சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 24,000 திருமணங்கள் நடைபெறுகின்றன. எப்படி 15,000 புதிய வீடுகள் கட்டுப்படியாகும்? மேலும், ஆண்டுக்கு 20,000 புதிய குடிமக்கள் வருகின்றனர்,” என்றார் ஹேசல்.

பிடிஓ வீடுகள் வாங்க முடியாதவர்கள் மறுவிற்பனைச் சந்தைக்குத் தள்ளப்படுவதால் அவற்றின் விலை கூடுவதாகவும் அவர் கூறினார். 2020 முதல் 2025 வரை மறுவிற்பனை வீடுகளின் விலை 53 விழுக்காடு அதிகரித்தாலும் சம்பளம் 21 விழுக்காடு மட்டுமே உயர்ந்ததாகச் சுட்டினார் அவர்.

“மசெகவால் கூடுதலான வீடுகளைக் கட்டமுடியாது என நினைக்கிறீர்களா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1981 முதல் 1985 வரை வீவக 189,000 வீடுகளைக் கட்டியது. அதாவது, 1980களில் ஆண்டுக்கு 38,000 வீடுகளைக் கட்டமுடிந்தது. இப்பொழுது அரசாங்கத்துக்கு முன்பைவிடக் கூடுதல் வளங்கள் உள்ளன. 15,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டமுடியாதா?

“அப்படிச் செய்யமுடியாவிட்டால், அரசாங்கம் இத்தனை புதிய குடிமக்களை வரவேற்கக்கூடாது,” என்றார் ஹேசல். “சொந்தக் குடிமக்களின் வீட்டுத் தேவைகளை அரசாங்கம் முதலில் பூர்த்திசெய்ய வேண்டாமா?” என்று அவர் கேட்டார்.

வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் அரசாங்கம் கணக்கிடுவதைவிட உண்மையில் அதிகம் என்றார் ஹேசல். “வெற்றிகரமாக பிடிஓ வீட்டுக்குப் பதிவுசெய்வது முதல் வீட்டுச் சாவி கிடைப்பது வரையான நேரமே அரசாங்கம் கணக்கிடும் காத்திருப்பு நேரம். வீடுகளுக்கு விண்ணப்பித்தும் வீடு கிடைக்காமல் தோல்வியடையும் நேரத்தை அது கணக்கில் கொள்ளவில்லை,” என்றார் அவர்.

அண்மையில் தேசிய வளர்ச்சி அமைச்சு குறைந்த காத்திருப்பு நேரம் உடைய வீடுகளைக் கட்டத் தொடங்கினாலும் குறைந்த வேகத்தில் அவற்றைக் கட்டுவதாக அவர் கூறினார். “தொடக்கத்தில் ஆண்டுக்கு 2,000 முதல் 3,000 அத்தகைய வீடுகளைக் கட்டியது. இவ்வாண்டு 3,800க்கு அதிகரித்தது. 2025 முதல் 2027 வரை, ஆண்டுக்கு 4,000 அத்தகைய வீடுகளைத்தான் அரசாங்கம் கட்டும்,” என்றார் அவர். இளம் தம்பதியர் விரைவில் குடும்பம் தொடங்கவேண்டுமெனில் அத்தகைய வீடுகளைக் கூடுதலாகக் கட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

99ஆண்டுக் குத்தகைகளின் முடிவை நெருங்க நெருங்க, பழைய வீடுகளின் மதிப்பு குறைந்துகொண்டே வருவது ஓர் உண்மையான பிரச்சினை என்றும் அவர் கூறினார். “மத்திய சேமநிதிக் கணக்குச் சேமிப்புகளை வீட்டுக்காகச் செலவிட்டபின் வீட்டின் மதிப்பு பூஜ்ஜியத்துக்குச் செல்கிறது,” என்றார் ஹேசல்.

தன்முனைப்பிலான முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டம் (VERS) மூலம் அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் என எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தாலும் அதுகுறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்