ஆக்ககரமான அனுபவங்கள் மூலம் பல்லின சமூக இணக்கத்தை உருவாக்குக: அதிபர் அழைப்பு

ஆக்ககரமான அனுபவங்கள் மூலம் பல்லின சமூக இணக்கத்தை உருவாக்குக: அதிபர் அழைப்பு

2 mins read
63d8455f-37e9-49aa-8f76-f77d39cef6ac
சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் அதன் உறுப்பினர்களின் மேம்பாட்டுக்கு மேற்கொண்ட முயற்சிகளை அதிபர் தர்மன் சண்முகரத்னம் பாராட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பன்முகத்தன்மையை ஆதரிக்கும் ஆனால் பல்லின, பல சமய மக்களிடையே பொதுவான அடையாளத்தை உருவாக்கும் முயற்சி இல்லாத பலகலாசாரக் கட்டமைப்பு தோல்வியுறும் என்பதை வரலாறும் அண்மைச் சம்பவங்களும் தெளிவாகக் காட்டுவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

வெற்றிபெற்ற சமூகங்கள் தொடர்பான அனைத்துலகக் கருத்தரங்கில் அக்டோபர் 14ஆம் தேதி அவர் உரையாற்றினார்.

“மீள்திறன் மிக்க பல்லின சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முயலும் வேளையில் ஆக்ககரமான அனுபவங்களை நாம் மேம்படுத்தலாம்; அதன்மூலம் சிறுபான்மைச் சமூகங்கள் செழிக்கவும் வெற்றிபெறவும் உதவலாம்,” என்றார் திரு தர்மன்.

உலகின் பல பகுதிகளில் சமூகங்களுக்கு இடையே நம்பிக்கை இழப்பு பரவலாகக் காணப்படுவதாக அதிபர் குறிப்பிட்டார்.

இன நல்லிணக்கம் ஒருமுறை ஏற்பட்டாலும் அது காலத்துக்கும் அப்படியே நீடிக்கும் என்று சொல்லமுடியாது என்பதற்கான நினைவூட்டல் இது என்று அவர் கூறினார்.

இன ரீதியான பாரபட்சம், கவலை ஆகியவற்றைத் துடைத்தொழிப்பது மிகக் கடினம் என்றார் திரு தர்மன். பிரிவினைச் சக்திகள் அவற்றை வெகு எளிதாகத் தட்டி எழுப்பும் ஆற்றல்மிக்கவை என்பதை அவர் சுட்டினார்.

இனம், சமயம் எனும் அம்சங்கள் அரசியலில் இழையோடும்போது மக்களுக்கிடையே காலப்போக்கில் மாறுபாடுகளும் கவலைகளும் அதிகரிக்கும் என்றும் அவற்றால் எளிதில் பிரச்சினைகள் மூளும் என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து சமயங்களையும் சேர்ந்த சிங்கப்பூரர்கள் சகிப்புத்தன்மையுடன் விளங்குவதும் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுவோரை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் தெரியவந்திருப்பதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர்த் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி சமூக, சமயத் தலைவர்களுடன் கலந்துரையாடி நாட்டின் சட்டங்களும் கொள்கைகளும் எந்தவொரு பிரிவையும் பாரபட்சமாக நடத்தவில்லை என்பதை உறுதிசெய்துகொள்வதாக அதிபர் கூறினார்.

இளம் வயதிலிருந்தே சமூகத்தில் கலந்து பழக ஊக்குவிப்பதன் மூலம் இணக்கமான சமூகத்திற்குத் தேவைப்படும் தகுதிகளை மேம்படுத்துவதற்குக் கல்விதான் மிக முக்கியமான அடிப்படை உத்தி என்றார் அதிபர்.

குறிப்புச் சொற்கள்