புக்கிட் பாத்தோக் பேருந்து முனையத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) இரவு நேர்ந்த விபத்தில், ஒரு மோட்டார்சைக்கிள் மோதியதால் 46 வயது ஆடவர் காயமுற்று, பிறகு மருத்துவமனையில் மரணமடைந்தார்.
மோட்டார் சைக்கிளுக்கும் பாதசாரி ஒருவருக்கும் இடையே புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யு 6 நோக்கிச் செல்லும் புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 23ல் நடந்த விபத்து பற்றிய தகவல் அன்றிரவு 11.20 மணிக்கு கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பாதசாரி, சிகிச்சை பலனின்றி அங்கு மரணமடைந்தார்.
விபத்தில் சம்பந்தப்பட்ட 27 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, ஒருவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் மற்றொருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கும் சென்றதை உறுதிப்படுத்தியது.
விபத்துக்குப் பிறகு இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளியில் இரண்டு மருத்துவ வாகனங்கள் விபத்து நடந்த இடத்தில் இருப்பது தெரிகிறது. மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் கிடப்பதும், மருத்துவ உதவியாளர்கள் ஒருவருக்கு அவசர உதவி செய்வதையும் காணமுடிகிறது.
விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

