புக்கிட் பாத்தோக் விபத்து: விளக்குக் கம்பத்தை மோதிய வேன் ஓட்டுநர் காயம்

புக்கிட் பாத்தோக் விபத்து: விளக்குக் கம்பத்தை மோதிய வேன் ஓட்டுநர் காயம்

1 mins read
சுயநினைவின்றி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
d164e150-e300-4dd7-96b0-693b62c6a9e8
வாகன ஓட்டுநரை அவரது இருக்கையில் இருந்து மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றியதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. - படம்: சிங்கப்பூர் சாலை விபத்துகள் ஃபேஸ்புக்

புக்கிட் பாத்தோக் ரோடு, தெங்கா லிங்க் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை (மே 29) பகல் 4 மணியளவில் நடந்த விபத்தில், ஒரு 50 வயது மினிபஸ் ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த விளக்குக் கம்பத்தை மோதினார்.

விபத்து குறித்து அன்றைய தினம் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது. சுயநினைவிழந்த நிலையில் அந்த வாகனத்தில் சிக்கிக்கொண்ட ஓட்டுநரை, மீட்புக் கருவிகளைக் கொண்டு வெளியேற்றி தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (என்யுஎஸ்ஹெச்) அழைத்துச் சென்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது.

விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய மற்றொரு நபர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். சேதமடைந்து சாலையில் முறிந்து விழுந்த விளக்குக் கம்பம், அங்கு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டது. அவ்வழியில் செல்லவேண்டிய ஏறத்தாழ 13 பேருந்துகள் பாதிக்கப்பட்டன.

அவற்றை நிர்வகிக்கும் டவர் டிரான்சிட் நிறுவனம் பிறகு மாற்றுப் பாதைகளில் எட்டுப் பேருந்துகள் செல்ல தற்காலிக ஏற்பாடு செய்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

சமூக ஊடகக் காணொளி

ஃபேஸ்புக்கில் பகிரப்படும் காணொளியில் சம்பவ இடத்தில் சாம்பல் நிற மினிபஸ் விளக்குக் கம்பத்தில் மோதிய நிலையில் நிற்பது தெரிகிறது. விளக்குக் கம்பம் சாலையை மறைத்தபடி விழுந்து கிடக்கிறது.

வாகனத்தின் வலதுபுற முன்கதவு விபத்தின் விளைவால் பெயர்த்தெடுக்கப்பட்டு சாலைத் தடுப்பின்மீது தனியே பிரிந்து கிடப்பதைப் பார்க்க முடிகிறது.

எஸ்சிடிஎஃப் மருத்துவ வாகனமும் தீயணைப்பு வண்டியும் அருகே இருந்தன.

குறிப்புச் சொற்கள்