செம்பவாங் தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய முகங்களை எதிர்பார்க்கலாம்: அமைச்சர் ஓங்

3 mins read
புதிய தொடக்கப்பள்ளி, பாலர் பள்ளிகள், குதிரை சார் மனநல சிகிச்சைக்கூடம் உள்ளிட்ட பல வசதிகளை செம்பவாங் மக்கள் எதிர்பார்க்கலாம்: அமைச்சர் ஓங்
fc9bb33c-73ab-4585-b7b9-c703dd6c51f0
‘ஆப்ஸ்டகல்ஸ்’ சவால் சிலவற்றைப் பயன்படுத்திப் பார்க்கும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான (இடமிருந்து) டாக்டர் லிம் வீ கியாக், போ லி சான், மரியம் ஜாஃபர், அமைச்சர் ஓங் யி காங். - படம்: லாவண்யா வீரராகவன்

எதிர்வரும் தேர்தலில் செம்பவாங் தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட புதிய முகங்களை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

வேட்பாளார்களின் பெயர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்களுக்காக கட்சித் தலைமையைப் பின்தொடர்ந்து வருவதாகவும், புதிய முகங்களைக் குடியிருப்பாளர்களிடமும் ஊடகத்தினரிடமும் அறிமுகப்படுத்த ஆவலாக உள்ளதாகவும் கூறினார் அமைச்சர்.

மொத்தம் 12 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள புக்கிட் கென்பராவின் புதிய வளாகங்களை ஞாயிற்றுக்கிழமை (மார்‌ச் 23) திறந்து வைத்த அவர், பொதுமக்களையும் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, இவ்வட்டாரத்துக்காகத் திட்டமிடப்பட்டுள்ள புதிய அம்சங்கள் குறித்தும் விளக்கினார்.

மேம்பாடு காணும் செம்பவாங்

சிங்கப்பூரின் ஆகப்பெரிய வெளிப்புற உடற்பயிற்சியகம், நீர் விளையாட்டு இடங்கள் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் விரிவடைந்துள்ளது புக்கிட் கென்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவம்.

இச்சமூக நடுவம் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் நிலையில் புதிய வசதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டன.

“செம்பவாங் பகுதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களும் புதிய கட்டடங்களும் இணைந்த தனித்துவமான வட்டாரம்,” எனக் குறிப்பிட்ட அமைச்சர் ஓங், “இந்த வட்டாரத்தில் பல இளம் குடும்பங்களும் வசிக்கின்றன. அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான வசதிகளும் மேம்பாடுகளும் அமைத்துத் தரப்படவுள்ளன,” எனவும் தெரிவித்தார்.

இவ்வாண்டின் பிற்பாதியில் இச்சமூக நடுவதில் மேலும் பல அம்சங்கள் அறிமுகம் காணும் என அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

புதிய வளாகத்தைத் திறந்துவைக்கும் அமைச்சர் ஓங் யி காங். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லிம் வீ கியாக், மரியம் ஜாஃபர் உடன் உள்ளனர்.
புதிய வளாகத்தைத் திறந்துவைக்கும் அமைச்சர் ஓங் யி காங். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் லிம் வீ கியாக், மரியம் ஜாஃபர் உடன் உள்ளனர். - படம்: லாவண்யா வீரராகவன்

செம்பவாங்கில் பல தொடக்கப்பள்ளிகள் இருந்தாலும், நடந்துசெல்லும் தூரத்தில் தொடக்கப்பள்ளி இருந்தால் பிள்ளைகளுக்கு வசதியாக இருக்கும் என்பதால் கென்பரா ஈஸ்ட்டில் விரைவில் புதிய தொடக்கப்பள்ளி அமைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இவ்வட்டாரத்தில் இரு புதிய பிடிஓ திட்டங்கள் அமையவுள்ளதைச் சுட்டிய அமைச்சர் ஓங், அவற்றுக்கு அருகிலேயே பாலர் பள்ளிகளும் அமையும் என்றார்.

‘ஈக்குவைன் தெரப்பி’ எனும் மனநலனுக்காக குதிரைகளைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வட்டாரத்தில் உள்ள காலனித்துவகால கறுப்பு-வெள்ளை கட்டடங்களில் சில, பொதுமக்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தப்பட திட்டங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதியைத் துடிப்புடனும் அழகுடனும் வைத்திருப்பது அவசியம் என்றும் வட்டாரவாசிகளிடம் அமைச்சர் ஓங் சொன்னார்.

புதிய அம்சங்கள்

பொதுமக்கள், தொண்டூழியர்களுடன் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பொதுமக்கள், தொண்டூழியர்களுடன் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

‘ஆக்டிவ் எஸ்ஜி’ அமைத்துள்ள முதல் வெளிப்புற ‘ஆப்ஸ்டகல்ஸ்’ அமைப்பு இச்சமூக நடுவத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 ‘ஆப்ஸ்டகள்ஸ்’ எனப்படும் கடும் பயிற்சி மேற்கொள்ள தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

‘ஃபாரஸ்ட் ஜிம்’ எனும் இவ்வளாகத்தில் பச்சைப்பசேலென மரங்களும் செடி கொடிகளும் சூழ பயிற்சி செய்வது பொதுமக்களிடம் உற்‌‌‌சாகம் ஏற்படுத்தியதைக் காண முடிந்தது.

குடும்பங்கள், குழந்தைகளுடன் விளையாட சிறு சிறு நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. புலன் சார்ந்த விளையாட்டுகளை விளையாட இப்பகுதி குழந்தைகளை ஊக்குவிக்கிறது.

அத்துடன், கென்பரா கோவ் எனும் வெளிப்புற நீச்சல்குளமும் அமைக்கப்பட்டுள்ளது.

வட்டாரவாசிகளின் உடல்நலம், உடற்பயிற்சி, சமூக ஈடுபாடு ஆகியவற்றுக்கான கூடமாக அமையும் நோக்கில் உணவங்காடி நிலையம், உட்புற விளையாட்டுகள், நீச்சல் குளம், மூத்தோர் பராமரிப்பு நிலையம், பலதுறை மருந்தகம், பட்டாம்பூச்சிப் பூங்கா உள்ளிட்ட பல அம்சங்களுடன் புதிய வசதிகளும் அமைத்துத் தரப்பட்டுள்ளன.

“இந்தியர்கள் துடிப்புடன் இருப்பது அவசியம். அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பல இன மக்கள் ஒன்றுகூடவும் இது உதவும் என நம்புகிறேன்,” என்றார் உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் ஜஃபார்.

உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புகளில் உறுப்பினராக உள்ள ஜமுனா ராணி, இந்த நடுவத்தில் அமைந்துள்ள வசதிகளை இவ்வட்டார இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இது, குடியிருப்புப் பேட்டைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மக்கள் வந்துசெல்ல வசதியாக இருக்கும் என்றார்.

தம் மகள் அனுவுடன் நீரூற்றில் விளையாடி மகிழ்ந்தார் குடியிருப்பாளர் கணே‌ஷ். “சிறுவர்கள் மின்னிலக்கச் சாதனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட இந்த வசதிகள் ஊக்குவிக்கும்,” என்றார் விண்வெளிப் பொறியாளரான அவர்.

“பரபரப்பான சூழலில் அண்டைவீட்டாரிடம் பேசிப் பழகக்கூட நேரம் இருப்பதில்லை. உடற்பயிற்சி மேற்கொள்ளும் அதேவேளையில் பிறருடன் கலந்துரையாடவும் இந்த நடுவம் வாய்ப்பளிக்கிறது,” என்றார் வட்டாரவாசியும் அரசாங்க ஊழியருமான சரஸ்வதி, 34.

குறிப்புச் சொற்கள்