சர்க்கரைப் பொங்கல், மெல்லிசைப் பாடல், ஆடல், உறியடிப் போட்டி, வாழையிலை விருந்து என புக்கிட் கோம்பாக்கில் குடியிருப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து பொங்கலைக் கொண்டாடினர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்டோர் கூடினர்.
மேடைக் கலைநிகழ்ச்சிக்கு இடையே சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டியும் பொங்கல் வைக்கும் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
தமிழர்களுடன் சீன, மலாய் இனத்தவர்களும் இணைந்து கொண்டாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் இந்திய உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து முன்கூட்டியே தெரியாதபோதும், அதனைப் பார்த்தவுடன் உடனே வீட்டுக்குச் சென்று தமது இந்திய பாணி மேல்சட்டையை அணிந்து வந்ததாகக் கூறினார் 21 வயதுப் பல்கலைக்கழக மாணவர் ஃபிலிக்ஸ் ஐசேக் லிம்.
“குறிப்பாக, உறியடி அங்கம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. எல்லாருடனும் கொண்டாட்டத்தில் ஒன்றிணைந்ததில் மகிழ்கிறேன்,” என்று அவர் கூறினார்.
குடும்பத்தினருடன் கொண்டாட்டங்களுக்கு வந்திருந்த இந்திய ஆடைத் தயாரிப்பாளரான 35 வயது சிந்துமதி, உறியடி அங்கத்தின்போது வெற்றிகரமாகப் பானையைக் கழியால் அடித்தார்.
உடைந்த பானையிலிருந்து தரையில் சிந்திய மிட்டாய்களைப் பிள்ளைகள் அள்ளிக்கொண்டனர்.
ஜெய் மிரத்தூன், லேகா விக்னயா என்ற தம் பிள்ளைகள் இருவரும் வண்ணம் தீட்டும் போட்டியில் பங்கேற்ற நிலையில், குடும்பத்தினரை முழுமையாக ஈடுபடுத்தியதாகத் திருவாட்டி சிந்துமதி கூறினார்.
இந்தியாவைச் சேர்ந்த அனுஷா பாலசுப்பிரமணியமும் மலேசியாவைச் சேர்ந்த அவரது கணவர் ராமசாமி லட்சுமணனும் இந்நிகழ்ச்சியில் தங்கள் மகனுடன் முதன்முறையாகக் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைந்தனர்.
“சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்தியர்களுடன் இணைந்து பொங்கல் சமைப்பது, வாழையிலையில் சாப்பிடுவது போன்றவற்றில் ஈடுபடுவதைக் காணும்போது பெருமையாகவும் மனத்திற்கு நிறைவாகவும் உள்ளது,” என்று திரு லட்சுமணன் கூறினார்.
ஹில்வியூ சமூக மன்றம் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பொங்கல் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடி வருவதாக அதன் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் குணசேகரன் தெரிவித்தார்.
“மக்கள் இதற்குத் தொடர்ந்து ஆதரவு நல்குவதால் நாங்கள் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறோம்,” என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு பெரிதாக நடத்தப்பட்ட தீபாவளிக் கொண்டாட்டங்களை அடுத்து, மிகக் குறுகிய காலத்தில் பொங்கலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததாக மூத்த அடித்தள ஆலோசகர் பிரமிளா கிலிட்டஸ் தெரிவித்தார்.
தமிழரின் பண்புநலன்களை எடுத்துரைக்கப் பொங்கல் போன்ற பண்டிகைக்காலங்கள் ஏற்றதாக உள்ளன.
அண்டை வீட்டாருடனும் பிற இனத்தினருடனும் உறவாடும் வாய்ப்பை இதுபோன்ற நிகழ்ச்சிகள் வழங்குகின்றன என்று திருவாட்டி பிரமிளா கூறினார்.

