புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி 25ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, கட்டமைப்புப் புதுப்பிப்புப் பணிகளையொட்டி நிறுத்தப்படவிருக்கிறது.
நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலைப் பதிவிட்டது.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையின் தற்காலிக செயலாக்கக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து அதன் புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு நிலையத்துக்குச் செயல்பாடுகள் மாறுவதற்கு உகந்த வகையில் இந்தச் சேவை நிறுத்தம் அமைகிறது.
பயணிகள் தற்போது சேவை வழங்கும் பேருந்துகள் அல்லது இலவசப் பேருந்துச் சேவையின்கீழான ( LRT Shuttle B) பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
இந்த இலவசப் பேருந்துகள் 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, சுவா சூ காங் நிலையத்திலிருந்து பெட்டிர் நிலையம் வழியாக புக்கிட் பாஞ்சாங் நிலையம் வரை சேவை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவையின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதுப்பிப்புப் பணிகள் 2026ல் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

