புதுப்பிப்புப் பணிகளின் இறுதிக் கட்ட நடவடிக்கைகளுக்காக செப்டம்பர் 20, 27 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் சேவை நாள் முழுவதும் முழுமையாக நிறுத்தப்படும்.
பொறியியல் பணிகளை விரைந்து முடிக்கவும், கூடுதல் சேவை சரிபார்ப்புகளைக் குறைப்பதற்காகவும் இரு நாள் முழு அடைப்பு இடம்பெறுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) தெரிவித்தது.
இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி புதுப்பிப்புத் திட்டத்தின்கீழ் திட்டமிடப்பட்டுள்ள இறுதிச் சேவை நிறுத்தங்கள் இவை என்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சேவை நிறுத்தப்படும் நாள்களில் பயணிகள் வழக்கமான பேருந்து சேவைகளான 922, 972, 963 ஆகியவற்றையும் B* இடைவழிச் சேவையையும் பயன்படுத்தலாம். இந்தப் பேருந்துகள் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் இயங்கும்.
B* இடைவழிப் பேருந்து சேவை சூவா சூ காங்கிலிருந்து புக்கிட் பாஞ்சாங் வரை பெட்டீர் எல்ஆர்டி நிலையத்தை தாண்டி சேவையாற்றும். அதற்கு வழக்கமான எல்ஆர்டி கட்டணமே வசூலிக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ், நவீன மின்சார விநியோக முறை, மேம்படுத்தப்பட்ட சமிக்ஞைக் கட்டமைப்பு, செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் சீரமைப்பு, மின்சாரப் பாதை மாற்றங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


