தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி தடங்கல்: மின்சார விநியோகம் காரணமாக இருக்கலாம்

2 mins read
72b6dc11-d27c-4cf8-ba23-6ef737914d06
இலகு ரயில் கட்டமைப்பில் உள்ள எரிசக்தியைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் முக்கிய பணியைப் பவர் ஸ்காடா கட்டமைப்பு செய்கிறது. - படம்: எஸ்எம்ஆர்டி/ ஃபேஸ்புக்

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் கட்டமைப்பில் நேற்று ஏற்பட்ட கோளாற்றுக்கு எரிசக்தியைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் முறையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலில் ஏற்பட்ட கோளாற்றால் வியாழக்கிழமை (ஜூலை 3) ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குச் சேவை தடங்கல் ஏற்பட்டது.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கப் பதிவில், எஸ்எம்ஆர்டி ரயில்களின் தலைவர் திரு லாம் ‌ஷூ காய், இலகு ரயிலில் ஏற்பட்ட சேவைத் தடங்கல் ‘பவர் ஸ்காடா’ (Power Scada) கட்டமைப்புடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

பவர் ஸ்காடா கட்டமைப்பு, இலகு ரயில் கட்டமைப்பில் எரிசக்தி விநியோகத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்துகிறது. அது ரயிலின் பாதுகாப்பையும் ரயில் செயல்பாட்டின் நம்பகத்தன்மையையும் வலுப்படுத்துகிறது.

பவர் ஸ்காடா கட்டமைப்பு, அவசர எரிசக்தி துண்டிப்புக் கட்டமைப்பைப் பாதித்தால் இலகு ரயில் தண்டவாளத்தில் உள்ள எரிசக்தி துண்டிக்கப்பட்டது என்று திரு லாம் சொன்னார்.

அந்தக் கட்டமைப்பு புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் எரிசக்திப் புதுப்பிப்புத் திட்டத்தின் ஒரு பகுதி. அதன் கட்டுமானப் பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவைத் தடங்கல் குறித்து நிலப் போக்குவரத்து ஆணையமும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் விசாரணை நடத்துவதாக திரு லாம் குறிப்பிட்டார். அவை கட்டமைப்பு நிலைத்தன்மையை மேம்படுத்த விரிவான வடிவ மறுஆய்வை மேற்கொள்ளவிருக்கின்றன.

“புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும் வேளையில் கட்டமைப்பைத் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் புதுப்பிப்புத் திட்டக் குழு சார்பில் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுக்காக மன்னிப்புக் கேட்பதாகச் சொன்ன திரு லாம், பயணிகளின் பொறுமைக்கும் புரிதலுக்கும் நன்றி தெரிவித்தார்.

புக்கிட் பாஞ்சாங் இலகு ரயிலில் ஜூலை 3ஆம் தேதி எரிசக்தி கோளாறு ஏற்பட்டதால் சேவைத் தடங்கல் ஏற்பட்டது. காலை 8.50 மணியளவில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின் காலை 11.30 மணியிலிருந்து ரயில் சேவை படிப்படியாகச் செயல்படத் தொடங்கியது.

அதன் விளைவாக ரயில் நிலையங்களுக்கு இடையே ஐந்து ரயில்கள் நின்றுபோனது. வேறு ஏழு ரயில்கள் தண்டவாளங்களில் நின்றன. தண்டவாளங்களில் சிக்கிக்கொண்ட பயணிகள் ஊழியர்களின் உதவியுடன் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

தண்டவாளங்களில் சிக்கிக்கொண்ட பயணிகள் ஊழியர்களின் உதவியுடன் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
தண்டவாளங்களில் சிக்கிக்கொண்ட பயணிகள் ஊழியர்களின் உதவியுடன் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். - படம்: சாவ்பாவ்
குறிப்புச் சொற்கள்