இவ்வாண்டு நவம்பர் 14ஆம் தேதிக்கும் அடுத்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட சில நாள்களில் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் (LRT) சேவையை முன்கூட்டியே நிறுத்தத் திட்டமிட்டிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தில் நான்கு நாள்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை எல்ஆர்டி ரயில் சேவை இரவு 10.30 மணிக்கு நிறுத்தப்படும். இந்தக் காலகட்டத்தில் பொது விடுமுறை நாள்களில், ரயில் சேவை வழக்கம் போல் இரவு 11.30 மணி வரை இயங்கும்.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் சேவையின் சமிக்ஞை அமைப்பை மேம்படுத்துவதற்கும் புதிய மறுசீரமைக்கப்பட்ட இலகு ரயில்களைச் சோதனை செய்வதற்கும் இம்மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட எல்ஆர்டி ரயில் சேவையை முன்கூட்டியே நிறுத்தும் அறிவிப்பு வழிவகுக்கும் என ஆணையம் சொன்னது.
இந்த எல்ஆர்டி சேவையின் மேம்படுத்தப்பட்ட சமிக்ஞை அமைப்பைத் தண்டவாளங்களுக்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் கருவிகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் கருவிகளைப் பொறுத்துவதற்குத் தேவைப்படும் நேரத்தைத் தாண்டி சோதனைச் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படுமெனவும் நிலப் போக்குவரத்து ஆணையமும் ரயில் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டியும் முன்பு தெரிவித்திருந்தது.
ரயில் சேவை முன்கூட்டியே நிறுத்தப்படும் நாள்களில் இரவு 10.30 மணிக்குப் பிறகு பயணிக்கும் பயணிகள் பேருந்துச் சேவை எண் 67, 171, 920, 922, 960, 963, 972, 972M, 973, 974, 976 ஆகியவை உட்பட புக்கிட் பாஞ்சாங் மற்றும் சுவா சூ காங் வட்டாரங்களுக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துச் சேவைகளையும் பயன்படுத்துமாறு பயணிகளை ஆணையம் அறிவுறுத்தியது.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்து தேவைப்பட்டால், பேருந்துச் சேவைகளுக்கு இடையிலான கால இடைவெளிகளில் மாற்றம் செய்யப்படும் என்றும் அது தெரிவித்தது.