2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் விரிவான அமைப்பு, வன்பொருள் மேம்படுத்தல்கள் நிறைவடைந்த பிறகு, புக்கிட் பாஞ்சாங் இலகுரக (எல்ஆர்டி) ரயில் சேவையில் பயணிகள் மேலும் நம்பகமான, தடையற்ற பயணங்களை எதிர்பார்க்கலாம்.
இந்த மேம்படுத்தல்களில், ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் 16.6 கி.மீ. தொலைவுள்ள மின்சார தண்டவாளங்களை மாற்றுவதும் அடங்கும். இப்பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது என்றும் மேலும் சுமார் 98 விழுக்காட்டுப் பணிகள் முடிந்துவிட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.
2018ல் தொடங்கப்பட்ட இந்தப் புதுப்பித்தல் பணிகளில், புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ரயில் சேவையின் சமிக்ஞை அமைப்பை மாற்றி, எம்ஆர்டி வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் புதிய தகவல் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு சமிக்ஞை அமைப்பை நிறுவுவதும் அடங்கும்.
இந்தச் சமிக்ஞை அமைப்பு, ரயில்கள் தங்களின் நிகழ்நேர இருப்பிடம், வேகத் தரவுகளைத் தண்டவாள ஓர அமைப்புகளுடன் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. தண்டவாள ஓர அமைப்புகள், தங்களின் மண்டலத்திற்குள் உள்ள ரயில்களின் இருப்பிடத்தைக் கண்காணித்து, அவற்றுக்கிடையேயான பாதுகாப்பான தூரங்களைக் கணக்கிட்டு, ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ சமிக்ஞை அளிக்கின்றன.
நிகழ்நேர ரயில் செயல்பாடுகள், ரயில் கட்டமைப்பின் பாதுகாப்பு, செயல்திறன் ஆகியவற்றை மேற்பார்வையிடும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மைய அமைப்புகளும் மேம்படுத்தப்பட்டன.
மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி அமைப்பின் நம்பகத்தன்மை குறியீடுகளை உயர்த்த உதவியுள்ளதாகத் தெரிவித்துள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம், வியாழக்கிழமையன்று (அக்டோபர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
உதாரணமாக, 2017ஆம் ஆண்டில் 53,000 கார்-கி.மீ. என்ற அளவில் இருந்த எல்ஆர்டி அமைப்பின் ரயில்களின் செயல்பாட்டு இடைவெளி, 2026 செப்டம்பர் மாதத்தில் 443,000 கார்-கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதியன்று, ‘டென் மைல் ஜங்ஷன்’ பணிமனையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், 2018ல் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கப்பட்டதிலிருந்து, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி அமைப்பின் ரயில் நம்பகத்தன்மை குறியீடு எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள், செங்காங்-பொங்கோல் எல்ஆர்டி அமைப்பின் ரயில்களிலும் பணிமனையிலும் நிறைவடைந்துள்ளன.
“நமது எம்ஆர்டி அமைப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதால், பராமரிப்புப் பணிகளை மேம்படுத்துவதிலும் அதிகரிப்பதிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். எங்களிடம் உள்ள சொத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவற்றில் சில காலப்போக்கில் பழமையடையக் கூடும். எனவே, உயர் மட்ட நம்பகத்தன்மையை உறுதிசெய்யும் வகையில், தொடர்ந்து பராமரிப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்துகொண்டே இருக்க வேண்டியது அவசியமாகும்,” என்று திரு சியாவ் கூறினார்.
