புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி இலகு ரயில் பாதையின் புதுப்பிப்புப் பணிகள் 88 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் சனிக்கிழமை (நவம்பர் 15) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாதம் தொடங்கி, ரயிலுக்கான புதிய சமிக்ஞை முறை அந்த நிலையத்தில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது எனவும் ஆணையம் உறுதிப்படுத்தியது.
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் செயல்படும் புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையில் 2018ஆம் ஆண்டில் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கின. கடந்த அக்டோபர் மாதத்தோடு, பழைய வண்டிகளுக்குப் பதிலாக, 19 மூன்றாம் தலைமுறை வகை புது ரயில்கள் சேவையில் இணைந்துள்ளன. சேவையில் உள்ள 13 இரண்டாம் தலைமுறை ரயில்கள் புதிய சமிக்ஞை முறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரயில்களுக்கு மின்சக்தியை வழங்கும் தண்டவாளங்களை மாற்றுவதே எஞ்சியுள்ள முக்கியப் பணிகளில் ஒன்றாகும். அந்தப் பணிகளில் ஐந்தில் ஒரு பங்கே இதுவரை நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நாலாம் காலாண்டில் அதுவும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி சேவையைத் தொடங்கியதிலிருந்து தண்டவாளங்கள் மாற்றப்படுவது இதுவே முதல் முறை.
இந்த புதுப்பிப்புப் பணிகள் மூலம், ரயில் பயணங்கள் மேம்பட்டு, பயணிகளின் நம்பகத்தன்மை கூடும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.
ரயில் சேவை செயல்பாட்டு மையமும் புதுப்பிக்கப்படுகிறது. எஸ்எம்ஆர்டி நிறுவனத்தால் 26 ஆண்டுகளாக இயக்கப்படும் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் வழித்தடங்களில் கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதியும் 19ஆம் தேதியும் இருமுறை 13 நிலையங்களிலும் சேவைத்தடை ஏற்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி தடத்திற்கான புதிய சமிக்ஞை முறையில் நடந்த மின்கோளாறு அதற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. ஆயினும் அண்மைய புள்ளிவிவரங்கள் ரயில்சேவை மேம்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி வழித்தடத்தில் அதன் ரயில்கள் சராசரியாக ஐந்து நிமிடத் தாமதத்துடன் 253,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளன. ஆகஸ்ட் மாதம் பதிவான 209,000 கிலோ மீட்டர் தூரத்தைவிட அது அதிகம்.

