புக்கிட் தீமா வனப்பகுதியில் நடந்த சுற்றுச்சூழல் ஆய்வு, அங்குள்ள 40 விழுக்காடு வனப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைத்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் அரசாங்கம் ஓல்டு ஜூரோங் ரோடு, அப்பர் புக்கிட் தீமா ரோடு ஆகிய பகுதிகளை வீடமைப்புக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி 5.5 ஹெக்டர் நிலப்பரப்பில் அவ்விரு சாலைகளை ஒட்டிய பகுதிகள் குடியிருப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
சிங்கப்பூரில் இயற்கை வனப்பு நிறைந்த பகுதி அவை ஆதலால் நகர மறுசீரமைப்பு வாரியம் அண்மையில் இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்தது.
ஆய்வில் பல முக்கிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அங்கு விலங்கினங்களும் மலர், செடி, கொடிகளும் மரங்களும் மிகவும் செழித்து விளங்குவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்துக்கு விளக்கமளித்த நகர மறுசீரமைப்பு வாரியம், கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இரு பகுதிகளும் மக்கள் குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்டவை என்று கூறியது.
அதன்படி வீடுகளுக்குத் தேவை பெருகி வருவதால் பல மத்திய பகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக வாரியம் தெரிவித்தது.
புக்கிட் தீமா வனப்பகுதியில் சில தனிப்பட்ட விலங்கினங்கள் வாழ்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் சுண்டா எறும்புதின்னி (பெங்கொலின்) என்ற எறும்புகளையும் கரையான்களையும் பூச்சிகளையும் உண்டு வாழும் விலங்கினமும் பறக்கும் தன்மையுடைய மலேயன் கொலிகோ அணில் வகையும் அடங்கும்.
குடியிருப்பு மேம்பாட்டுக்கென அப்பகுதிகள் அழிக்கப்பட்டால் இவ்விரு உயிரினங்களும் வாழ்வாதாரத்தை இழக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இரண்டு பகுதிகளும் எட்டு காற்பந்துத் திடல்களின் அளவைக்கொண்டவை. அவை மேம்படுத்தப்படும்போது புக்கிட் தீமா பாதுகாக்கப்பட்ட இயற்கை வனப்பகுதிக்கும் புக்கிட் பாத்தோக் இயற்கை பாதைக்கும் இடைப்பட்ட உயிரினங்களின் உணவுக்கும் இருப்பிடங்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்படும் என்று அந்த 187 பக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர மறுசீரமைப்பு வாரியம் அங்குள்ள முக்கிய மரங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவது அல்லது மீண்டும் வளர்த்தெடுப்பது போன்றவற்றைப் பரிசீலிப்பதாக அறியப்படுகிறது. இதுபோன்ற இயற்கை வளங்கள் பராமரிக்கப்படுவது எதிர்காலத்துக்கு இன்றியமையாதது எனவும் ஆய்வு வலியுறுத்தியுள்ளது.
எனவே, மேம்படுத்தப்படவுள்ள இயற்கைப் பகுதியில் 44 விழுக்காடு (2.4 ஹெக்டர் அளவு) நிலப்பரப்பு பாதுகாக்கப்படவேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆய்வினை தெம்புசு ஆசியா சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனம் நடத்தியது.

