புக்கிட் தீமாவில் வாகனங்கள் மீது கிறுக்கல், 43 வயதுப் பெண் கைது

2 mins read
d2b07bf0-274e-4b5a-9369-1f5e4b22dc26
இரட்சண்ய சேனையின் (The Salvation Army) அப்பர் புக்கிட் தீமா வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீதும் கிறுக்கல்கள் காணப்பட்டன. - படங்கள்: SGFOLLOWSALL/ இன்ஸ்டகிராம்

புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள இரட்சண்ய சேனை (The Salvation Army) வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீதும் கிறுக்கல்கள் காணப்பட்டன. அந்தச் சம்பவத்தின் தொடர்பில் வியாழக்கிழமை (டிசம்பர் 25) காலை, 43 வயதுப் பெண்ணைக் காவல்துறை கைது செய்துள்ளது.

எண் 500 அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்துள்ள அந்த வளாகத்தில் கிறுக்கல்கள் காணப்பட்டது குறித்துக் காலை 9.15 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

தெளிக்கக்கூடிய வகையிலான சிவப்பு நிறச் சாயத்தைக் கொண்டு வளாகச் சுவரிலும் அங்கு நிறுத்தப்பட்ட வேன்கள் உள்ளிட்டவற்றிலும் கிறுக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் விசாரணை தொடர்வதாகக் காவல்துறை கூறியது.

‘எஸ்ஜிஃபாலோஸ்ஆல்’ இன்ஸ்டகிராம் பக்கத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பதிவேற்றப்பட்ட படங்கள், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மூன்றும் வளாகச் சுவர்கள் இரண்டும் சிவப்பு, மஞ்சள் நிறத் துணிகளால் மூடப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன.

பிற்பகல் 3.30 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அங்குச் சென்றபோது, அந்தக் கிறுக்கல்கள் மறைக்கப்பட்டிருந்தன என்றும் காவல்துறை வாகனம் ஏதும் காணப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

கிறுக்கப்பட்ட சொற்கள் சமய உணர்வுகளைப் புண்படுத்தக்கூடியவை என்று கூறிய சிங்கப்பூர் இரட்சண்ய சேனை, அந்தச் சொற்களை வெளியிட மறுத்துவிட்டது.

அந்த வளாகத்தில் திட்டமிடப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் அவை அமைந்திருந்ததாகத் தெரிகிறது. எனினும், திட்டமிட்டபடி கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கருதுவதாகக் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்தகைய நடத்தைக்கு மன்னிப்பு கிடையாது என்றும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

குறிப்புச் சொற்கள்