பெரிய குப்பைகளுக்கு மறுவாழ்வு

3 mins read
9cb6789f-21cb-4639-a9e1-4d70fb8a07cd
(வலமிருந்து இடம்) தெமாசெக்‌ உயர்நிலைப்பள்ளியின் ‘நாஸ் டிசைன்’ (NAZ Design) குழுவைச் சேர்ந்த உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர் அத்வைத் கார்திகெயன், 14, உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களான தன்தானியா நிவான் பங்கஜ், தாம் ஜி ஹிம் ஆகியோர் பரிசு வென்றனர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 3

நீடித்த நிலைத்தன்மை வடிவமைப்பில் சிங்கப்பூர் இளையர்களின் திறமைகளை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் நடத்தப்படும் பொதுச் சுகாதார மன்றத்தின் இரண்டாம் ‘பல்கி வேஸ்ட் டு வொண்டர்’ (Bulky Waste To Wonder) போட்டியின் இறுதிச்சுற்று அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது.

கல்வி அமைச்சு, ஜெ.ஓ.இ சுற்றுச்சூழல் கூட்டணி (J.O.E Eco Alliance) ஆகியவற்றுடன் இணைந்து பொருள்களின் நிலையான பயன்பாட்டையும் மறுபயனீட்டையும் ஊக்குவிக்க, தூக்கி எறியப்பட்ட பெரிய குப்பைகளைப் புதுமையான, பயனுள்ள பொருள்களாக மாற்றியமைக்கும் போட்டியை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக பொதுச் சுகாதார மன்றம் நடத்துகிறது. இவ்வாண்டின் போட்டியில் 13 உயர்நிலைப் பள்ளிகளிலிருந்து 68 செயல்திட்டங்கள் பதிவுசெய்யப்பட்டன. இது சென்ற ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 செயல்திட்டங்கள் சவுத் பீச் டவரில் சனிக்கிழமை (அக்டோபர் 26) காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றுள் சிறந்த 5 வெற்றிப் படைப்புகளாக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்‌கப்பட்டன.

வெற்றியாளர்களின் படைப்புகள் நவம்பர் நடுப்பகுதிவரை சவுத் பீச் டவரில் காட்சிப்படுத்தப்படும். நீடித்த நிலைத்தன்மை தொடர்பான கிறிஸ்துமஸ் சந்தையிலும் (Sustainable Christmas Market) அவை காட்சிக்‌கு வைக்‌கப்படவுள்ளன. மேலும், அவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியின் இறுதிச் சுற்றில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

“குப்பைகளை முறையாகக் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுவது போன்ற எளிய செயல்கள் நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். பொது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் அனைவரது பொறுப்பாகும்,” என்று அவர் தமது வரவேற்பு உரையில் கூறினார்.

இறுதிச் சுற்றின் பத்துப் போட்டியாளர்களில் ஒருவரான கிராஞ்சி உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவரான ஜெய. ஜெயகயல்விழி, 15, அவரது வகுப்புத் தோழியான ஆல்யா மர்ஸ்யா பிண்டே முகமட் எஃபென்டியுடன் இணைந்து பழைய உலோக அலமாரியை உள்ளரங்குத் தோட்டக்‌கலைக்கு ஏற்ற ஓர் அமைப்பாக மாற்றியமைத்தார்.

“‘இன்டோர் அர்பன்’ என்ற பெயரைக் கொண்ட எங்களது தயாரிப்பு வீட்டிற்குள் தாவரங்களைச் சுலபமாகவும் சுத்தமாகவும் வளர்க்க வழிவகுக்கிறது,” என்று ஜெயா விளக்கினார்.

தொடர்புடைய செய்திகள்

“இது சிறிய இடங்களில் வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு செடிக்கும் சரியான அளவு சூரிய ஒளியும் தண்ணீரும் கிடைப்பதை உறுதிசெய்ய ஒரு தண்ணீர் தொட்டியையும் அடுக்கு அமைப்பையும் பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரில் பிரபலமாகிவரும் நகர்ப்புறத் தோட்டக்கலை போக்கால் தங்களது ஆர்வம் தூண்டப்பட்டது என்று கூறிய ஜெயா, நீடித்த நிலைத்தன்மை தாவரப் பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு மற்றவர்களுக்கு தங்களின் திட்டம் ஊக்கமளிக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார்.

கிரீன்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 வயது மாணவரான சிவ கணேஷ் ராமன் தனது ‘மொபைல் கிட்டார் மாஸ்டர்பீஸ்’ படைப்பிற்காக மெரிட் பரிசை வென்றார். மாடல் வாகனங்கள் மீதான தமது ஆர்வத்தால் தூண்டப்பட்ட சிவ கணேஷ், முதியோரை மகிழ்விக்கும் நோக்கில், பழைய மேசை ஒன்றை மாற்றியமைத்து ஊடாடும் அம்சங்களுடன் கிட்டாரை வைக்கும் நகரும் தளத்தை உருவாக்கியுள்ளார்.

“முதியவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றை நான் உருவாக்க விரும்பினேன்,” என்றார் சிவ கணேஷ். “பல முதியவர்கள் தனிமையை அனுபவிப்பதால் இந்த திட்டத்தின்வழி அவர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

தெமாசெக்‌ உயர்நிலைப் பள்ளியின் ‘நாஸ் டிசைன்’ (NAZ Design) குழுவைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர் அத்வைத் கார்திகெயன், 14, ஒன்றாம் வகுப்பு மாணவர்களான தன்தானியா நிவான் பங்கஜ், தாம் ஜி ஹிம் ஆகியோர் மெரிட் பரிசை வென்றனர்.

உறுதியான பாவ்பாப் மரத்திலிருந்து (Baobab tree) உத்வேகம் பெற்று, பழைய மேசை ஒன்றைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருள்களை ஒழுங்கமைக்கும் ஒரு கருவியாக அவர்கள் மாற்றியமைத்துள்ளனர். “பாவ்பாப் என்ற பெயரைக் கொண்ட எங்களது தயாரிப்பு அதிக இடத்தைப் பயன்படுத்தாத வடிவமைப்பைக்‌ கொண்டுள்ளது,” என்று அத்வைத் கூறினார்.

இந்த அனுபவம் நீடித்த நிலைத்தன்மை குறித்த தனது எண்ணங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாகவும் அத்வைத் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்