சிங்கப்பூரில் குண்டு துளைக்காத பாதுகாப்பு அறைகளுக்கான விதிமுறைகளுக்கு உட்படாத பொருள்களை விநியோகிப்பவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘குடிமைத் தற்காப்பு ஒதுங்கிடம், தீ பாதுகாப்பு (இதர திருத்தங்கள்) மசோதா’, வணிக நிறுவனங்களின் செயல்பாட்டுச் சுமையைக் குறைக்கும் வகையிலும் தீ பாதுகாப்பு தொடர்பான பல்வேறு வழிமுறைகளிலும் சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கிறது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் உள்ள குண்டு துளைக்காத பாதுகாப்பு அறைகளை மாற்றியமைக்கப் பயன்படும் அங்கீகரிக்கப்படாத, தரமற்ற பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது குடிமைத் தற்காப்புப் படை நேரடியாகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும், தீ பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் உரிமங்கள் மற்றும் அனுமதிகளின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தை தற்போதைய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இது வணிக நிறுவனங்கள் அடிக்கடி அனுமதிகளைப் புதுப்பிக்கும் கட்டுப்பாட்டுச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
அத்துடன், கட்டுமானத் தளங்கள், பெட்ரோல் நிலையங்கள், குறிப்பிட்ட ஆய்வகங்கள் மற்றும் அவசரகால மின்இயக்கிகளுக்காக டீசலைச் சேமித்து வைக்கும் கட்டடங்கள் போன்ற குறைந்த அபாயம் கொண்ட இடங்களில் பயன்படும் பெட்ரோலியம் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களுக்குப் பொதுவான வகுப்புவாரியான உரிம முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தப் புதிய உரிம முறையின் மூலம் தகுதிபெறும் கட்டட உரிமையாளர்கள் இனி தனித்தனியாக உரிம ஒப்புதல்களைப் பெறத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தீ பாதுகாப்பு விதிமுறைகளுக்குக் கண்டிப்பாகக் கட்டுப்பட வேண்டும். அதேவேளையில், அதிக அபாயம் கொண்ட பெட்ரோலியம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு வழக்கம்போலத் தனிப்பட்ட உரிம முறையே தொடரும்.


