சிங்கப்பூரில் தரை வீடுகளைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ஆடவர் தமக்கு வழங்கப்பட்ட பிணை விதிமுறையை மீறியதால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 39 வயது லோங் ஸிகுவா வீட்டுக்குள் புகுந்து 500,000 வெள்ளிக்கு மேலான நகைகளைக் கொள்ளையடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவருக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டது.
லோங் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை. லோங்கின் வழக்கறிஞரும் விசாரணை அதிகாரியும் ஆடவரைத் தொடர்புகொள்ள உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மே 23ஆம் தேதியன்றும் லோங் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து லோங்கின் பிணை ரத்து செய்யப்பட்டு கைது உத்தரவு விதிக்கப்பட்டது.
லோங் 2024ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி வின்ட்சர் பார்க் ரோட்டில் உள்ள வீட்டில் தனது கூட்டாளியான லோ சாங்சாங்குடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளைச் சம்பவத்தையடுத்து ஜூன் 26ஆம் தேதி அவ்விரு சீனக் குடிமகன்களும் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
லோவுக்குப் பிணை வழங்கப்படவில்லை. அவர் காவல்துறையின் விசாரணையில் உள்ளார்.