லோயாங் அவென்யூ சாலையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நீர்குழாய் பழுது ஏற்பட்டு ஏறத்தாழ ஒரு நாள் பகல் முழுதும் அங்கு போக்குவரத்துத் தடை ஏற்பட்டது.
சீரமைப்புப் பணிகள் முடிந்தபின், அன்றைய தினம் இரவு 10.50 மணிக்கு அச்சாலை போக்குவரத்துக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது.
உடனடியாக நடந்த சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
ஓல்டு தெம்பனிஸ் ரோடு அருகில், சாங்கி வில்லேஜ் நோக்கிச் செல்லும் லோயாங் அவென்யூவில் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்ட பழுதினால் சாலைத் தடங்கள் பாதிக்கப்பட்டன.
சீரமைப்புப் பணிகள் நடந்தபோது வாகன ஓட்டுநர்களும் சாலைப் பயனாளர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பொறுமைக்கும் தமது நன்றியை பியுபி அதன் பதிவில் தெரிவித்துக்கொண்டது.
அதற்கு முன்னதாக வியாழக்கிழமை மதியம் ஏற்பட்ட நீர்குழாய்ப் பழுதால் அந்தப் பகுதியில் இரண்டு சாலைத் தடங்கள் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டன என்று பியுபி தகவல் வெளியிட்டது.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ அவரது ஃபேஸ்புக் பதிவில் பாசிர் ரிஸ் புளோக் 149, பாசிர் ரிஸ் டிரைவ் 1 ஆகிய சாலைகளுக்கு இடைப்பட்ட லோயாங் அவென்யூ சாலையின் இரண்டு தடங்கள் மூடப்பட்டது குறித்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதில் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை காலைவரை நடக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.


