தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 28 முதல் பேருந்து, ரயில் கட்டணங்கள் உயர்வு

2 mins read
42e293f1-4017-44df-a8cc-a6fd08e88e01
கடந்த ஆண்டு 11 காசு உயர்த்தப்பட்டதே ஆக அதிகமான கட்டண உயர்வு. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2024 டிசம்பர் 28ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் 6 விழுக்காடு உயர்கின்றன.

அதன்படி, அட்டையில் கட்டணம் செலுத்தும் பெரியவர்கள் பேருந்து, ரயில் பயணம் ஒவ்வொன்றுக்கும் 10 காசு அதிகமாகச் செலுத்த வேண்டும்.

அதேநேரம், மூத்தோர், மாணவர்கள், உடற்குறை உள்ளோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கான சலுகைக் கட்டண அட்டை மூலமான பயணத்துக்கு நான்கு காசு உயரும்.

இந்தப் பிரிவில் ஏறத்தாழ இரண்டு மில்லியன் பயணிகள் உள்ளனர்.

பேருந்து, ரயில் கட்டணங்களை மறுஆய்வு செய்த பின்னர் பொதுப் போக்குவரத்து மன்றம் திங்கட்கிழமை (செப்டம்பர் 9) இதனை அறிவித்தது.

பெரியவர் ஒருவர் தெம்பனிசில் தொடங்கி ராஃபிள்ஸ் பிளேசில் முடிக்கும் எம்ஆர்டி பயணத்திற்கு தற்போது $1.92 செலுத்துகிறார். கட்டண மாற்றம் அறிமுகம் கண்ட பின்னர் இது $2.02ஆக உயரும்.

2023ஆம் ஆண்டு, பெரியவர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 7 விழுக்காடு அல்லது 11 காசு அதிகரித்தது. அதுவே, சாதனை அளவான கட்டண உயர்வு.

அதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு 2.9 விழுக்காடும் 2021ஆம் ஆண்டு 2.2 விழுக்காடும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்ந்தன.

2020ஆம் ஆண்டு, கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, பொதுமக்களுக்கு உதவும் நோக்கில், கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

போக்குவரத்துக் கட்டணங்களையும் பயணச்சீட்டுச் சேவைகளையும் முறைப்படுத்தும் பொதுப் போக்குவரத்து மன்றம் இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் 6 விழுக்காட்டு உயர்வு, ஓராண்டுக்கு அனுமதிக்கப்படக்கூடிய உயர்வான 18.9 விழுக்காட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு என்று தெரிவித்து உள்ளது.

18.9% என்பது, இவ்வாண்டு கட்டண உயர்வில் 3.3 விழுக்காடு சரிசெய்யப்படுவதுடன் கடந்த ஆண்டு மறுஆய்வுக்குப் பிறகு 15.6 விழுக்காட்டு உயர்வு தள்ளிவைக்கப்பட்டதைக் குறிக்கும்.

பணவீக்கமும் சம்பளங்களும் உயர்ந்ததையும் எரிசக்திக் கட்டணங்கள் 2022 சாதனை அளவிலிருந்து குறைந்ததையும் புதிய கட்டண உயர்வு காட்டுவதாக மன்றம் தெரிவித்தது.

18.9 விழுக்காடு உயர்த்தப்பட வேண்டியதில் 12.9 விழுக்காட்டை வருங்கால மறுஆய்வுக்காக நிறுத்தி வைத்த பின்னர், எஞ்சிய 6 விழுக்காட்டு உயர்வு அனுமதிக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

வாழ்க்கைச் செலவின உயர்வு சிங்கப்பூரர்களின் கவலையாக இருப்பதை உணர்ந்ததால், 6 விழுக்காட்டு உயர்வை அனுமதித்ததாகவும் மன்றம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்