டிசம்பர் 26 முதல் பேருந்து, ரயில் கட்டணங்கள் 13 காசு வரை அதிகரிப்பு

டிசம்பர் 26 முதல் பேருந்து, ரயில் கட்டணங்கள் 13 காசு வரை அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 7:34 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள பெரியவர்கள் இவ்வாண்டு டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து பேருந்து, ரயில் பயணங்களுக்குக் கூடுதலாக 12 அல்லது 13 காசு கட்டணம் செலுத்துவர்.

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்துள்ள எரிசக்தி விலையைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் 7 விழுக்காடு உயர்ந்தன.

மூத்தோர், மாணவர்கள், உடற்குறையுள்ள பயணிகள் ஒவ்வொரு பயணத்துக்கும் கூடுதலாக ஐந்து காசு கட்டணம் செலுத்துவர்.

2023ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டண மறுஆய்வின்போது போக்குவரத்துக் கட்டணங்கள் 11 காசு உயர்த்தப்பட்டன. அதையடுத்து, தற்போதைய கட்டண உயர்வே ஆக அதிகமானது.

பயணங்களுக்கு ரொக்கம் செலுத்தும் பெரியோர் கூடுதலாக 20 காசு செலுத்துவர். மூத்தோர், மாணவர்கள், உடற்குறையுள்ளோர் கூடுதலாக 10 காசு செலுத்துவர்.

வேலைநலன் போக்குவரத்துச் சலுகைத் திட்டத்தின்கீழ் உள்ள குறைந்த வருமான ஊழியர்களுக்கான பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் போக்குவரத்து மன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) தெரிவித்தது.

மாதாந்தர பயண அட்டைக்கான கட்டணங்களிலும் மாற்றம் இருக்காது. பெரியவர்களுக்கு $122ஆகவும் மூத்தோருக்கும் உடற்குறையுள்ளோருக்கும் $55ஆகவும் அது தொடர்ந்து நீடிக்கும்.

பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தை அதிகபட்சம் 14.7 விழுக்காட்டுக்கு உயர்த்த அனுமதி உள்ளதைச் சுட்டிய பொதுப் போக்குவரத்து மன்றம், அதில் பாதி அதாவது 7 விழுக்காட்டுக்கு மட்டும் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் வழங்கியதாகக் குறிப்பிட்டது.

அதிகரிக்கும் செயல்பாட்டு, எரிசக்தி விலைக்கு மத்தியில் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பின் நிதி நிலைத்தன்மையைத் தொடர்ந்து தக்கவைப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கும் அதைக் கட்டுப்படியாக வைத்திருக்க கட்டணம் உயர்த்தப்பட்டது,”என்று மன்றம் குறிப்பிட்டது.

பெரியவர்கள் 3.2 கிலோமீட்டர் வரையிலான பயணத்துக்குக் கூடுதலாக 12 காசு கட்டணமும் செலுத்துவர். அதைவிட கூடுதலான தூரம் பயணம் செய்வோர் கூடுதலாக 13 காசு கட்டணமும் செலுத்துவர்.

கட்டண உயர்வு நடப்புக்கு வரும்போது தானா மேராவிலிருந்து பிடோக்கிற்கு ரயிலில் அட்டையைப் பயன்படுத்தி பயணம் செல்லும் பெரியவர்கள் $1.28 கட்டணத்திற்குப் பதிலாக $1.40 செலுத்துவர்.

தானா மேராவிலிருந்து ஜூரோங் ஈஸ்ட் செல்வோருக்கான கட்டணம் தற்போது $2.42. அது, டிசம்பர் 26ஆம் தேதியிலிருந்து $2.55ஆக இருக்கும்.

3.2 கிலோமீட்டருக்குள் பயணம் செய்யும் மூத்தோர் ஒவ்வொரு பயணத்துக்கும் 69 காசுக்குப் பதிலாக 74 காசுகள் செலுத்துவர்.

7.2 கிலோமீட்டருக்குமேல் பயணம் செய்தால் அத்தகையோருக்கான கட்டணம் $1.07லிருந்து $1.12ஆக அதிகரிக்கும்.

குறிப்புச் சொற்கள்
பேருந்துரயில்கட்டணம்