பேருந்து வருகை நேரங்களைக் காட்டும் கட்டமைப்பு, 90 விழுக்காட்டிற்குமேல் சீரமைக்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
பேருந்துக் கட்டண முறையையும் பேருந்து எண்ணிக்கையின் நிர்வாகத்தையும் புதுப்பிப்பதற்கான பணியைத் தான் தொடங்கியுள்ளதாக அது சனிக்கிழமை (பிப்ரவரி 7) கூறியது.
பேருந்து வருகை நேரக் கட்டமைப்பின் செயல்பாட்டைச் சீரமைக்க, ஜனவரி 21 முதல் ஒப்பந்ததாரருடன் இணைந்து தான் செயலாற்றி வருவதாக ஆணையம் தெரிவித்தது.
இதில் 4,000 பேருந்துகளில் உள்ள ‘டிரான்ஸ்மிட்டர்’களின் ‘மெமரி கேஷ்’ (memory cache) எனப்படும் தற்காலிக நினைவகத்தை அழிப்பதும், அவற்றின் மென்பொருளைத் தொழில்நுட்பர்களைக் கொண்டு புதுப்பிப்பதும் அடங்கும். சில பேருந்துகளில் டிரான்ஸ்மிட்டர்கள் மாற்றப்பட்டன.
பேருந்து வருகை நேரத் தகவல்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்களும் நீண்ட நேரம் காத்திருப்பதாகக் காட்டும் பிழைகளும் தொடர்ந்து குறையும் என்று ஆணையம் தெரிவித்தது.
“இந்தக் காலகட்டத்தில் பயணிகள் கடைப்பிடித்து வந்த பொறுமைக்காக நாங்கள் நன்றி கூறுகிறோம். இடையூறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்,” என்று ஆணையம் கூறியது.
அதிகம் பயன்படுத்தப்படும் தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைத்து, தகவல்களை வேகமாகக் கொண்டுவர ‘மெமரி கேஷ்’ உதவுகிறது. தரவுகள் அதிக அளவில் பதிவாக ஆக, கட்டமைப்புகள் மெதுவடையக்கூடும். இதனால் அந்தக் கட்டமைப்புகளில் கோளாறுகளும் செயலிழப்புகளும் நேரலாம்.
தொடக்கத்தில், இந்தக் கட்டமைப்பு நான்கு நாள்களில் முழுமையாகச் சரிசெய்யப்படும் என ஜனவரி 22ஆம் தேதி ஆணையம் கணித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட 3,000 பேருந்துகளில் புதுப்பிப்பு நிறைவுசெய்யப்பட்டதாக அது தெரிவித்தது. ஆயினும், கூடுதலாக 1,000 பேருந்துகளுக்குப் புதுப்பிப்பு தேவைப்பட்டதை ஆணையம் கண்டறிந்தது.
இந்தப் பிரச்சினையை ஆணையம் ஜனவரி 10ஆம் தேதி கண்டறிந்தது. துல்லியமற்ற தகவல்கள் இந்தக் கட்டமைப்பில் அந்த வாரம் முழுவதும் காணப்பட்டன.
இதன் விளைவாக, பேருந்து நிறுத்தங்களிலுள்ள மின்னிலக்கத் தகவல் பலகைகளும் ஆணையத்தின் ‘மைடிரான்ஸ்போர்ட்.எஸ்ஜி’ (MyTransport.SG) செயலியும் மூன்றாம் தரப்புச் செயலிகளும் பேருந்து வருகை நேரம் குறித்த தகவலைத் தர முடியாமல் போயின.
ஜனவரி 23ல், சோதனைக்காக கட்டமைப்பு மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது பேருந்து வருகை நேரங்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான தகவல்கள் மீண்டும் கிடைக்கும் என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
கட்டமைப்பு படிப்படியாகச் சீரமைக்கப்படும் என்றும் ஆணையம் கூறியது. 2025 இறுதியில் திரட்டப்பட்ட தகவலின்படி, சிங்கப்பூரில் 6,067 பொதுப் பேருந்துகள் உள்ளன.

