விரைவுச்சாலையில் பற்றியெரிந்த பேருந்து

விரைவுச்சாலையில் பற்றியெரிந்த பேருந்து

ஐந்து நாள்களில் தீக்கிரையான நான்காவது வாகனம்
படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

06 Mar 2025 - 9:29 pm

1 mins read

புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (மார்ச் 6) மாலை பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இவ்விபத்தில் ஒருவரும் காயமடையவில்லை.

இதன் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான படங்கள், பேருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதையும் அதிலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் காட்டின.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் வருமுன்னரே அப்பேருந்தின் ஓட்டுநரும் அதிலிருந்த 11 பயணிகளும் வெளியேறிவிட்டனர். மூன்று நீர்ப்பீய்ச்சுகுழல்களின் துணையுடன் தீ அணைக்கப்பட்டது.

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில், கிராஞ்சி விரைவுச்சாலை வெளிவழிக்கு முன்பாக வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிவது குறித்து தனக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

பேருந்து தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து நாள்களில் சாலையில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது இது நான்காவது முறை.

கடந்த ஆண்டு கட்டடம் சாராத தீச்சம்பவங்களில் வாகனம் தொடர்பானவையே ஆக அதிகம் என்று குடிமைத் தற்காப்புப் படை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் 607 அவசர அழைப்புகள் வந்தன என்றும் அவற்றில் 220 வாகனங்கள் தொடர்பானவை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
வாகனம்தீவிரைவுச்சாலைசிங்கப்பூர்