விரைவுச்சாலையில் தீயில் கருகிய பேருந்து

விரைவுச்சாலையில் தீயில் கருகிய பேருந்து

1 mins read
3e2e521e-2b3e-4e88-a8fc-bd39d110eca1
பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: GLENLEE/SGROAD BLOCKS/TRAFFIC NEWS டெலிகிராம் குழு

தீவு விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்த எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) தீப்பிடித்து எரிந்தது.

அந்தச் சம்பவம் குறித்து முற்பகல் 11.45 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

துவாஸ் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் கிளமெண்டி ரோடு வெளிவழிக்கு முன்னதாக பேருந்தில் எரிந்த தீயை தமது படையினர் அணைத்துவிட்டதாக அது தெரிவித்தது.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பேருந்தில் தீப்பிடித்தது எப்படி என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று SGRoad Blocks/Traffic News என்னும் டெலிகிராம் குழுவில் பகிரப்பட்டது.

விரைவுச்சாலையின் ஓரத்தில் பேருந்து முழுவதும் தீயில் எரிவதையும் கரும்புகை வெளியேறியதையும் அந்தக் காணொளி காட்டியது.

பேருந்து முழுமையாக எரிந்து எலும்புக்கூடானதை மற்றொரு காணொளியில் காணமுடிந்தது.

தீப்பிடித்து எரிந்த பேருந்தின் தடத்திற்குள் மறைப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சாலைப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

அந்தச் சம்பவத்தால் குறைந்தபட்சம் மூன்று சாலைத் தடங்கள் மூடப்பட்டதுபோல காணொளியில் தெரிந்தது.

2025 அக்டோபர் மாதம் தீவு விரைவுச்சாலையில் சென்றுகொண்டு இருந்த எஸ்எம்ஆர்டி பேருந்து ஒன்றில் தீப்பிடித்ததால் அதிலிருந்த 40 பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஆண்டு 226 வாகனங்கள் தீயில் சிக்கியதாக குடிமைத் தற்காப்புப் படை தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டது. அதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டு 257 வாகனங்களில் தீப்பிடித்ததாகவும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்