துவாசில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6ஆம் தேதி) அன்று இரு பேருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தார், மற்றொரு பேருந்து ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
அந்த இரு பேருந்துகளுக்கு இடையே துவாஸ் தெற்கு அவென்யூ 1 நோக்கிச் செல்லும் துவாஸ் தெற்கு அவென்யூ 4ல் ஏற்பட்ட விபத்து பற்றி தங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 7.35 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்து நடந்த இடத்திலேயே 64 வயது ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்துவிட்டதாக குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் மற்றொரு பேருந்தில் இருந்த 67 வயது ஓட்டுநர் கவனமின்றி பேருந்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த விபத்தில் ஒருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படை விளக்கியது. அந்த நபர் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.