ஆர்ச்சர்ட் சாலை அருகே திங்கட்கிழமை பிற்பகல் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 42 வயது கார் ஓட்டுநர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்தது.
இவ்விபத்து ஸ்டீவன்ஸ் சாலை, ஸ்காட்ஸ் சாலை, டிரேகாட் டிரைவ் ஆகியவை சந்திக்கும் இடத்தில் நிகழ்ந்தது எனவும் அது குறித்துப் பிற்பகல் 1.16 மணிக்குத் தகவல் கிடைத்தது எனவும் காவல்துறை கூறியது.
அந்தக் கறுப்பு நிற டொயோட்டோ காரின் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் அப்போது சுயநினைவுடன் இருந்தார் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
63 வயதான பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை கூறியது.
இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கமும், காரின் வலப்பக்கமும் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதை சிங்கப்பூர் ரோடு விஜிலன்டே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் காண முடிந்தது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

