இடறி விழுந்த முதியவருக்குப் பேருந்து ஓட்டுநர் உதவி

இடறி விழுந்த முதியவருக்குப் பேருந்து ஓட்டுநர் உதவி

2 mins read
087e17e3-2fd7-4c91-b11c-e5423f114610
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் மூத்த பேருந்து ஓட்டுநர் கான் வாய் லூன். - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட்

சின் மிங் சாலையைக் கடக்கும்போது முதியவர் ஒருவர் நடைபாதை விளிம்பில் (kerb) இடறி முன்னோக்கி விழுந்தார்.

சம்பவம் நடந்த அந்த வழியாக எண் 130 பேருந்தை ஓட்டி வந்த ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ பேருந்து ஓட்டுநர் ஒருவர் அவருக்கு உதவுவதற்காகப் பேருந்தை நிறுத்தினார்.

மூத்த பேருந்து ஓட்டுநர் கான் வாய் லூனின் இந்த நற்செயலைப் பற்றி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துகொண்டது.

முதியவர் ஒருவர் முன்னால் சாலையைக் கடப்பதைக் கவனித்த திரு கான், நடைபாதை விளிம்பில் ஏறும்போது அவர் தடுமாறி விழுந்ததைக் கண்டதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

“வாய் லூன் தயங்காமல் தமது பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஒரு வழிப்போக்கருடன் சேர்ந்து உதவ விரைந்தார்,” என்று அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டது. முதியவர் சுயநினைவோடு இருந்தபோதும் திகைப்புடன் காணப்பட்டார்.

திரு கானும் அந்த வழிப்போக்கரும் முதியவருக்கு நெற்றி மற்றும் மூக்கில் சிராய்ப்புக் காயங்கள் இருப்பதைக் கவனித்தனர்.

மருத்துவ உதவி வாகனத்திற்கு ஏற்பாடு செய்ய எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்வதற்கு முன்பு, அந்தப் பாதசாரி எழுந்து உட்கார அவர்கள் உதவினர் என்று கூறப்படுகிறது.

முதியவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக அவர் பேருந்திலிருந்து முதலுதவிப் பெட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டார்.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த இருக்கை ஒன்றில் அவரை அமரவைத்த பிறகு, தமது பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தத் திரு கான் முயன்றார்.

சம்பவம் குறித்துப் பேசிய மூத்த பேருந்து ஓட்டுநர், “உதவி தேவைப்படும் ஒருவருக்கு என்னால் உதவ முடிந்தால், நான் நிச்சயமாக முன்வந்து உதவுவேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்