மழையில் சிக்கிய முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்

மழையில் சிக்கிய முதியவருக்கு உதவிய பேருந்து ஓட்டுநர்

2 mins read
0bd839c2-2b40-4a54-932d-4b0f9f434c63
பேருந்து ஓட்டுநர் ஓம்ரி முகம்மது யூசோஃப் தமது பேருந்தை நிறுத்தி, தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தில் இருந்த முதியவருக்குக் கைகொடுத்தார். - படங்கள்: buses[IN]gapore!, எஸ்பிஎஸ் டிரான்சிட் / ஃபேஸ்புக்

தனிநபர் நடமாட்ட உதவிச் சாதனத்தில் இருந்த பயணி ஒருவருக்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர், அவருக்குக் கைகொடுக்க தமது பயணத்திற்கு நடுவே பேருந்தை நிறுத்தினார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் ஓம்ரி முகம்மது யூசோஃப், ஜாலான் தோ பாயோ வழியாகப் பேருந்து எண் 153ஐ இரவில் ஓட்டிச் சென்றபோது, கனமழை பெய்துகொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரத்தில் முதியவர் ஒருவர் மழையில் சிக்கிக்கொண்டதை அவர் கண்டதாக எஸ்பிஎஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 30) ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.

அந்தச் சம்பவம் ஜூலை 8ஆம் தேதி இரவு 8.15 மணி அளவில் நடந்ததாக ஒரு ஃபேஸ்புக் பதிவு (buses[IN]gapore!) கூறியது. அது தொடர்பான புகைப்படங்களும் பகிரப்பட்டன.

அந்தத் தனிநபர் நடமாட்டச் சாதனத்தின் சக்கரங்கள் நடைபாதையிலிருந்து சறுக்கியதால், அந்தச் சாதனம் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது.

சம்பவம் தொடர்பான படங்கள், எதிரே வாகனங்கள் வந்துகொண்டிருந்த சாலையை நோக்கி அந்தச் சாதனம் சாய்ந்திருந்ததையும் அதனால் முன்னோக்கி நகர முடியாமல் இருந்ததையும் காட்டின.

மற்றொரு பெண்ணும் உதவிசெய்வதற்காக அங்கே நின்றிருந்தார். இருப்பினும், அந்தச் சாதனத்தின் எடை காரணமாக அவரால் அதை நகர்த்த முடியாமல் போனதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது.

ஓம்ரி தமது பேருந்தைச் சாலை ஓரமாக நிறுத்தி, அந்த முதிய மாதுக்கு உதவச் சென்றார்.

அந்தச் சாதனத்தைத் தூக்குவதற்கு இரண்டு பேருக்குமேல் தேவைப்படுவர் என்பதை உணர்ந்த ஓம்ரி, பேருந்தில் இருந்த ஒரு பயணியின் உதவியையும் நாடினார்.

மூவரும் இணைந்து, அந்தச் சாதனத்தை மீண்டும் நடைபாதையில் ஏற்றி வைத்தனர்.

அந்தப் பயணி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்த பிறகு, ஓம்ரி தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பதிவுக்கு 700க்கும் மேற்பட்ட ‘விருப்பக்குறிகள்’ கிடைத்தன.

அத்துடன், ஓம்ரியின் கனிவான உள்ளத்தையும் இணையவாசிகள் பலர் பாராட்டினர்.

குறிப்புச் சொற்கள்