சிங்கப்பூருக்குள் மின்சிகரெட் கருவிகளைக் கடத்தியதற்காகப் பேருந்து ஓட்டுநரான 32 வயது மகேந்திரன் கே.வி.கே. சாமிக்கு மூன்று மாதங்கள், ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மலேசியரான மகேந்திரன் ஒப்புக்கொண்டார்.
குற்றத்தைப் புரிந்தபோது மலேசியப் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் அவர் பணிபுரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அப்போது அவருடைய மாதச் சம்பளம் ஏறத்தாழ 2,500 ரிங்கிட் (S$790). அது அவருக்கும் அவரது குடும்பத்துக்குமான செலவுகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, கூடுதல் பணம் ஈட்டுவதற்காக மின்சிகரெட் கருவிகளை மகேந்திரன் சிங்கப்பூருக்குள் கடத்தினார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பு, முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவரிடமிருந்து மகேந்திரனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
மின்சிகரெட் கருவிகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தினால் 2,000 ரிங்கிட் ரொக்கம் தரப்படும் என்று அந்த நபர் மகேந்திரனிடம் கூறினார். அதற்கு மகேந்திரன் இணங்கினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதியன்று அந்த நபர் மகேந்திரனுடன் மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளைச் சிங்கப்பூரில் விட்டுவிட்டு மலேசியா திரும்பியதும் ஜோகூர் பாருவில் குறிப்பிட்ட ஓர் இடத்தில், சாலையோரமாகப் பேருந்தை விட்டுவிட்டுச் செல்லுமாறு அந்த நபர் மகேந்திரனிடம் கூறினார். சாவியைப் பேருந்திலேயே விட்டுச் செல்லுமாறும் மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது.
மறுநாள் காலை 4.30 மணி அளவில் அந்த நபர் சொன்னது போல மகேந்திரன் செய்தார். தமது பேருந்தை அடையாளம் காண அதன் வாகன எண்ணை அந்த நபரிடம் மகேந்திரன் தெரிவித்தார்.
பேருந்துக்குள் மின்சிகரெட் கருவிகள் ஏற்றப்பட்டுவிட்டதாகக் காலை 10 மணி அளவில் மகேந்திரனுக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 8ஆம் தேதியன்று அவற்றைச் சிங்கப்பூருக்குள் கடத்திச் செல்லும்படி மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் சோதனைச்சாவடியைக் கடந்ததும் மின்சிகரெட் கருவிகளைக் கொண்டுசெல்ல வேண்டிய இடம் பற்றித் தெரிவிக்கப்படும் என்று மகேந்திரனிடம் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 8ஆம் தேதி மாலை 4.20 மணி அளவில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மகேந்திரன் பேருந்தை ஓட்டிச் சென்றபோது, அதை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டனர்.
பேருந்தில் பயணப் பெட்டி வைக்கும் பகுதியைத் திறக்க மகேந்திரன் தயங்கியதாகவும் அதன் சாவி தம்மிடம் இல்லை என்று அவர் தெரிவித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேருந்தின் இன்னொரு பக்கத்திலிருந்து பார்த்த அதிகாரிகள் பயணப் பெட்டி வைக்கும் பகுதிக்குள் பழுப்பு நிற அட்டைப் பெட்டிகள் இருப்பதைக் கவனித்தனர்.
இதையடுத்து, பயணப் பெட்டி வைக்கும் பகுதியை மகேந்திரன் திறந்தார். அட்டைப் பெட்டிகளுக்குள் 3,899 மின்சிகரெட் கருவிகள் இருந்தன. இதையடுத்து, மகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
தமது தாயார் மற்றும் சகோதரர்களைப் பராமரித்து வருவதால் தமக்குக் கருணை காட்டும்படி நீதிபதியிடம் மகேந்திரன் மன்றாடினார்.
குற்றம் புரிந்ததற்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

